ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!

33

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கான வரியை 500 சதவீதம் ஆக உயர்த்தும் மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளதாக, குடியரசு கட்சியின் சென்ட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார்.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தும் டிரம்ப்பின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. டிரம்ப்பின் முயற்சிகளுக்கு ஏதாவது ஒரு முட்டுக்கட்டை வந்த வண்ணமே உள்ளது. இதனையடுத்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அபராதம் விதித்து வருகிறார் டிரம்ப். அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனை இந்தியா நிராகரித்துவிட்டது. ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்கிறது.


இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்வேறு விஷயங்கள் குறித்து டிரம்ப் உடன் ஆக்கப்பூர்வமாக விவாதித்தேன். அப்போது. நானும் செனட்டர் ப்ளூமென்டால் மற்றும் பலருடன் இணைந்து உருவாக்கிய ரஷ்யா மீதான தடைகள் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் அமைதிக்காக சலுகைகளை வழங்க வரும் வேளையிலும், புடினின் வெறும் வாய்ஜாலம், அப்பாவி மக்களை கொன்று வருவதால், இந்த நடவடிக்கை எடக்கப்பட்டதாக இருக்கும்.


புடினின் போர் இயந்திரத்துக்கு எரிபொருள் அளிக்கும் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளைத் தண்டிப்பதற்கும் இந்த மசோதா அதிபர் டிரம்ப்பிற்கு அதிகாரம் அளிக்கும்.உக்ரைனுக்கு எதிரான புடினின் ரத்தக் களறிக்கான நிதியை வழங்கும் மலிவான ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை தூண்டுவதற்கு இந்த மோதா அதிபர் டிரம்ப்பிற்கு மகத்தான செல்வாக்கை வழங்கும்.



அடுத்த வாரமே இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்த மசோதாப்படி, ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும், பொருட்களுக்கும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 500 சதவீத வரி விதிக்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது.

Advertisement