இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய விசா பெறுவதில் சிக்கல்

8

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு சென்று கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.




ஆஸ்திரேலியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும், சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த சூழலில், இந்தியாவை அதிக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இணைத்துள்ளது. இந்தப் பட்டியலில் ஏற்கனவே பாகிஸ்தான் உள்ள நிலையில், வங்கதேசம், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.


இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் விசா நடைமுறைக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஆங்கில மொழித்திறன், வங்கி கணக்குகள் ஆய்வு, கல்வி நிறுவனங்களின் உண்மைத் தன்மையை ஆராய்தல் உள்ளிட்ட கடும் சோதனைகள் இருக்கும். இதனால், மாணவர்களின் விசாவை வழங்குவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படும். கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.


இதுதான் காரணமா?




இந்தத் திடீர் நடவடிக்கை குறித்து தெளிவான காரணங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், இந்தியாவில் போலிப் பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டதே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.


அண்மையில் கேரளாவில் சர்வதேச பல்கலைகளில் பயில்வதற்கு, 10 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு போலி ஆவணங்களை வழங்கிய கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது.


இது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகையில்,"ஆஸ்திரேலியாவில் தரமான கல்வியைத் தேடும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் முறைகேடுகளைத் தடுக்கவும் உதவும்," என்றனர்.

Advertisement