குளிர்கால தாஜ்மகால் - ஓர் உன்னத அனுபவம்!


கற்பனைக்கு எட்டாத அழகு, காதலின் சின்னம், உலக அதிசயங்களில் ஒன்று எனப் போற்றப்படும் தாஜ்மகால், பனிக்காலத்துக் காலையில் எப்படிக் காட்சியளிக்கும்.

ஆக்ராவின் கடும் குளிரிலும், யமுனை ஆற்றின் கரையோரம் ஒரு வெண்ணிற அதிசயம் பனிமூட்டத்திற்குள் மெல்லத் தலைதூக்குகிறது. குளிர்காலத்தின் இந்த அதிகாலைப் பொழுதுகளில் தாஜ்மகாலைப் பார்ப்பது என்பது வெறும் சுற்றுலா மட்டுமல்ல, அது ஒரு கவித்துவமான அனுபவம்.
Latest Tamil News
தாஜ்மகால் எப்போதும் அழகானதுதான். ஆனால், குளிர்காலத்தில் அதன் அழகுக்கு இன்னும் கூடுதல் மெருகேறுகிறது:

பனிமூட்டம் சூழ்ந்த காலை வேளைகளில், தூரத்தில் இருந்து பார்க்கும்போது தாஜ்மகால் மேகங்களுக்கு நடுவே மிதப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைத் தரும். அருகில் செல்லச் செல்ல, அந்த வெண்பனித் திரையைக் கிழித்துக்கொண்டு பளிங்கு மாளிகை வெளிப்படும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
Latest Tamil News
கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் வெயில் இல்லாமல், குளிர்காலத்தின் மென்மையான சூரிய ஒளி பளிங்கு கற்களின் மீது படும்போது, தாஜ்மகால் ஒருவித முத்து போன்ற நிறத்தில் மின்னும். இது புகைப்படக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

குளிர்காலத்தின் தெளிவான நிலவொளி இரவுகளில், தாஜ்மகாலைப் பார்ப்பது வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்று. நிலவின் ஒளியில் அந்த வெண்பளிங்கு கற்கள் நீல நிறச் சாயலில் ஜொலிக்கும்.
Latest Tamil News
கி.பி. 1632-ல் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் 20,000-க்கும் தொழிலாளர்களால் கட்டப்பட்ட இந்த தாஜ்மகால் முகலாயக் கட்டிடக்கலையின் உச்சமாகக் கருதப்படுகிறது. பாரசீகம், இஸ்லாமிய மற்றும் இந்தியக் கட்டிடக்கலை முறைகளின் சங்கமமாக இது திகழ்கிறது.

ராஜஸ்தானின் மக்ரானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர வெண்பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இதிலுள்ள பூவேலைப்பாடுகள் 'பியட்ரா துரா' எனும் விலையுயர்ந்த கற்களைப் பதிக்கும் முறையில் செய்யப்பட்டவை.

குளிர்காலத்தில் தாஜ்மகாலைப் பார்க்கச் செல்பவர்கள் அதிகாலை 6:00 மணிக்கே சென்றுவிடுவது நல்லது. கூட்டம் குறைவாக இருக்கும் என்பதோடு, சூரிய உதயத்தின் அழகையும் ரசிக்கலாம்.
Latest Tamil News
காலங்கள் கடந்தும் காதலின் தூய்மையை உலகிற்குப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும் தாஜ்மகாலைப் பொறுத்தவரை உலகில் இரண்டு வகை மனிதர்கள்தான் உண்டு; ஒன்று தாஜ்மகாலைப் பார்த்தவர்கள், மற்றொன்று அதைப் பார்க்கத் துடிப்பவர்கள். நீங்கள் இரண்டாவது வகை என்றால் இப்போது நல்ல வாய்ப்பு

-எல்.முருகராஜ்

Advertisement