பணி நிரந்தரம் கோரி விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் மரணம்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்

31

சென்னை; சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் கண்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 549 பேர் ரூ.5000 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

தற்போது மாத ஊதியமாக ரூ.12,500 வழங்கப்பட்டு வந்த போதிலும், பணி நிரந்தரம் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரான கண்ணன் என்பவரும் போராட்ட களத்தில் இருந்து வந்தார்.

போராட்டத்தின் போது அனைவரையும் போலீசார் கைது செய்த போது இவரும் கைதாகி வானகரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார். அப்போது பகுதிநேர ஆசிரியர் கண்ணன், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர், மீட்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Advertisement