ஈரானிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு


புதுடில்லி: ஈரானிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை ஈரானுக்கு மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டம் நடத்துவோர் மீது அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. கலவர சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


ஈரானில் தற்போது உள்ள இந்தியர்கள் (மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட) அனைவரும் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கும் போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேற வேண்டும்.அனைத்து இந்தியக் குடிமக்களும் மற்றும் இந்திய வம்சாவளியினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்குமாறும், தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும், உள்ளூர் ஊடகங்களில் வரும் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இந்தியர்கள் அனைவரும் தங்கள் பயண மற்றும் குடிவரவு ஆவணங்கள், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை ஈரானுக்கு மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
அவசரத் தொடர்பு எண்கள்
+98 9128109115
+98 9128109109
+98 9128109102
+98 9932179359 உதவி தேவைப்பட்டால், இந்திய தூதரகத்தின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in
ஈரானில் உள்ள இந்தியர்கள், தாங்கள் இன்னும் தூதரகத்தில் பதிவு செய்யவில்லை என்றால், உடனடியாகப் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்: (https://www.meaers.com/request/home). இணையத் தடை காரணமாகப் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் சார்பாகப் பதிவு செய்யலாம்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement