சத்தீஸ்கரில் தொடரும் நக்சல்கள் வேட்டை; முக்கிய தலைவர்கள் உள்பட 29 பேர் ஒரே நாளில் சரண்

2

சுக்மா: சத்தீஸ்கரில் நக்சல்கள் 29 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து, பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நக்சல்கள் நடமாட்டத்தை கண்டறிந்து, அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. வரும் மார்ச்சுக்குள் நக்சல் செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நக்சல்கள் ஏராளமான பேர் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். அரசின் நடவடிக்கைகளால் தாக்குப் பிடிக்க முடியாத நக்சல்கள் பலர் தொடர்ந்து சரண் அடைந்து வருகின்றனர்.

அதன் முக்கிய கட்டமாக, சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பின் முன்னணி தலைவர்கள் உள்பட 29 நக்சல்கள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது;

சரண் அடைந்தவர்களில் போடியம் புத்ரா என்பவரின் தலைக்கு ரு.2 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு வாக்குறுதிகளின் படி அவர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைந்து இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தண்டேவாடாவில் கடந்த ஜன.8ம் தேதி 63 நக்சல்களும், சுக்மாவில் ஜன.7ம் தேதியும் ஏராளமான நக்சல்கள் சரண் அடைந்தனர். 2025ம் ஆண்டில் மட்டும் சத்தீஸ்கர் முழுவதும் கிட்டத்தட்ட 1500க்கும் அதிகமான நக்சல்கள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement