பின்வாங்கிய சிங்கம்!

'இவ்வளவு எதிர்பார்த்து, கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டதே...' என கவலைப்படுகின்றனர், தெலுங்கானாவைச் சேர்ந்த, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்.

தெலுங்கானாவில், முதல்வர், ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2023ல் நடந்த சட்டசபை தேர்தல், அதை தொடர்ந்து, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த சந்திரசேகர ராவ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்; கட்சி கூட்டங்களில், சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் தான் பங்கேற்றார். இதனால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வில் இருந்தனர்.

இந்நிலையில், சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதாகவும், ஆளுங்கட்சியின் திட்டங்களை, நேருக்கு நேர் எதிர்த்து முதல்வரிடம் கேள்வி கேட்க சந்திரசேகர ராவ் தயாராகி விட்டதாகவும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனால், கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கூட்டத் தொடரின் முதல் நாளில் சட்டசபைக்கு வந்திருந்தார், சந்திரசேகர ராவ். முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் கை குலுக்கிவிட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட அடுத்த

நிமிடமே, காரில் ஏறி சென்று விட்டார்.

அவரது கட்சியினரோ, 'சிங்கம் களம் இறங்கும் என பார்த்தால், இப்படி பின்வாங்கி விட்டதே...' என, புலம்புகின்றனர்.

Advertisement