இதே நாளில் அன்று

ஜனவரி 9:


கரூர் மாவட்டம், திருக்காம்புலியூரில் ரங்கா ராவ் - ரங்கம்மாள் தம்பதியின் மகனாக, 1917ல், இதே நாளில் பிறந்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
சிறுவயதில் தாயை இழந்த இவர், நண்பர் ராகவேந்திர ராவின் நாடக அனுபவங்களை கேட்டு, மதுரை ஜகந்நாத அய்யரின் 'பாலமோகன ரஞ்சித சங்கீத சபா'வில் சேர்ந்து நடித்தார். அந்நிறுவனம் பலரிடம் விற்கப்பட்டு, எஸ்.வி.வெங்கட்ராமன் வாங்கி, நஷ்டத்தால் மூடினார். அவர், ஏ.வி.மெய்யப்ப செட்டி யாரிடம், தன் குழுவினருக்காக வேலை கேட்டார்.

அவர், தன் பிரகதி நிறுவனத்தில் அனைவரையும் ஒப்பந்தம் செய்தார். எஸ்.வி.வெங்கட்ராமன், இசையமைப்பாளர் ஆனார். டி.ஆர்.ராமச்சந்திரன், நந்தகுமார் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவர் நகைச்சுவை நாயகனாக நடித்த, சபாபதி படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து, நாம் இருவர், வாழ்க்கை உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட படங்களில், நகைச்சுவை நாயகனாகவே நடித்து புகழ் பெற்றார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில், இவர் நாயகனாகவும், சிவாஜி கணேசன் இரண்டாவது நாயகனாகவும் நடித்தனர்.

இவர் தயாரித்த, பொன்வயல் படத்தில், சீர்காழி கோவிந்தராஜனை பின்னணி பாடகராக அறிமுகம் செய்தார். வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி உள்ளிட்ட முன்னணி நாயகியருடன் நடித்த இவர், தன் 73வது வயதில், 1990, நவம்பர் 30ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement