போலீஸ் செய்திகள்

மரணத்தை தேடிச்சென்ற பரிதாபம்

மதுரை: மதுரை பாசிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜா 25. லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு காளவாசலில் இருந்து பழங்காநத்தம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்ற போது பின்னால் வந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் கோச்சிங் சென்டர் ஊழியர் திருநகர் தர்மர் 56, பழங்காநத்தம் சிவக்குமார் ஆகியோர் வந்த டூவீலருக்கு வழிவிட மறுத்ததால் விரட்டிச்சென்று லாரியை நிறுத்தி ராஜாவை தாக்கினர். பதிலுக்கு ராஜா தாக்கியதில் தர்மர் இறந்தார். கொலை வழக்கில் ராஜாவை எஸ்.எஸ். காலனி போலீசார் கைது செய்தனர்.

போலி இன்சூரன்ஸ் ஆவணம்

மதுரை: மதுரை எஸ்.பி.ஐ., ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார். சென்னையைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வழக்கில் சதீஷ்குமார் தாக்கல் செய்த இன்சூரன்ஸ் ஆவணம் போலி என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

விடுதியில் தற்கொலை

திருமங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணாங்குண்டு புதுாரைச் சேர்ந்த அபிதரன் 24, இவர் மதுரை ஒத்தக்கடையில் உள்ள பால்பண்ணையில் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் லாட்ஜில் தங்கியிருந்த இவர், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடையில் பணம் நகை திருட்டு

திருமங்கலம்: மதுரை செல்லூரை சேர்ந்த சங்கீதா 40, திருமங்கலம் தும்மக்குண்டு அரசு பள்ளி எதிரே பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த நபர் ஒருவர், 20 தலையணைகள் தேவை என கேட்டார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் சீட்டுப் பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கி கல்லாப் பெட்டியில் வைத்துவிட்டு, கடையின் உள்ளே சென்று தலையணையை எடுத்து வந்தார்.

அந்த நபரிடம் தலையணையை கொடுத்துவிட்டு, பணம் கேட்டபோது வீட்டில் கேட்டுவிட்டு வருவதாக அவசரமாக கிளம்பினார். சந்தேகமடைந்த சங்கீதா கல்லாவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பணம் ரூ. 3 ஆயிரம், தாலிச் செயின், மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

உண்டியலில் திருட்டு

திருமங்கலம்: ஆலம்பட்டியில் மகாமுனி கோவில் பூசாரியாக கருப்பசாமி 10 ஆண்டுகளாக உள்ளார். நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது, கதவு உடைக்கப்பட்டதுடன், வாசலில் சில்லரை காசுகள் சிதறிக் கிடந்துள்ளன. ஒருங்கிணைப்பாளர் இளையராஜாவுக்கு தகவல் தெரிவித்தார். சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்த போது 3 பேர் கோவில் உண்டியல்களை உடைத்து பணம், சில்லரை காசுகளை ஒரு பையில் அள்ளிப்போட்டு திருடிச் சென்றது தெரிந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement