வெனிசுலா எண்ணெயை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா தயார்; வெள்ளை மாளிகை

33


வாஷிங்டன்: வெனிசுலா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்த பிறகு, அந்த நாட்டில் உள்ள எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, வெனிசுலா எண்ணெய் வளங்களை எடுத்து, உலக நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில், "வெனிசுலாவில் இருந்து தினசரி 50 மில்லியன் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை எடுத்து, அமெரிக்கா அதனை சுத்திகரித்து விற்கும். இதன்மூலம், வெனிசுலா வளர்ச்சி பெறும். நம்மிடம் இருந்து எடுத்ததை நாம் மீண்டும் எடுத்துக் கொண்டோம்," என்று கூறினார்.

இந்த நிலையில், வெனிசுலா எண்ணெயை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் கிரிஸ்டோபர் ரைட் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது; வெனிசுலாவின் கச்சா எண்ணெயை அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். வெனிசுலாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் விற்பனை செய்யப்படும். இந்தியாவுக்கும் எண்ணெய் விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது," என்றார்.

இந்தியா கச்சா எண்ணெயை அதிகளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக இருந்தது. ஆனால், வரிவிதிப்பு போன்ற சமீபத்திய நடவடிக்கைகளால், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இந்த சூழலில், இந்தியாவுக்கு வெனிசுலா எண்ணையை விற்க அமெரிக்கா தானாக முன்வந்துள்ளது.

Advertisement