பா.ஜ., பெண் எம்.எல்.ஏ., இறந்ததாக இரங்கல் வெளியிட்டவர் மீது வழக்கு

மங்களூரு: உயிருடன் இருக்கும் பெண் எம்.எல்.ஏ., இறந்ததாகக் கூறி, முகநுாலில் இரங்கல் செய்தி வெளியிட்டவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

தட்சிண கன்னடாவின் சுள்ளியா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பாகிரதி முருல்யா. இவர் மரணம் அடைந்ததாக கூறி, பில்லவா சந்தேஷ் என்பவரது முகநுால் கணக்கில், நேற்று ஒரு பதிவு வெளியானது. அந்தப் பதிவில், 'எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., பாகிரதி முருல்யா, தனது சமூகத்திற்காக நிற்காமல் அனைவரையும் விட்டுச் சென்றார். அவரது இழப்பை தாங்கும் சக்தியை, பா.ஜ., தொண்டர்களுக்கு கடவுள் அளிக்கட்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவு வேகமாக பரவியது. எம்.எல்.ஏ., கவனத்திற்கும் சென்றது. பொய்யாக தகவல் பரப்பிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பன்ட்வால் போலீசில் பாகிரதி முருல்யா புகார் அளித்தார். புகாரின்படி, சந்தேஷ் என்கிற சீதாராமன், 27 என்பவர் மீது வழக்கு பதிவானது.

எஸ்.சி., சமூக எம்.எல்.ஏ.,வான பாகிரதி முருல்யா வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல், இதுபோன்ற தவறான பதிவுகளை வெளியிடுவதாக, தட்சிண கன்னடா பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் சவுதா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Advertisement