மஹா.,வில் இன்று மாநகராட்சி தேர்தல்: மும்பையை கைப்பற்ற போவது யார்?

4

மும்பை: மஹாராஷ்டிராவில், மும்பை உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பையை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதில், யார் மகுடம் சூடப் போகின்றனர் என்பது நாளை தெரிந்து விடும்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த டிசம்பரில், 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.

29 மாநகராட்சிகள்



இதில், 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி, ஆளும் மஹாயுதி கூட்டணி சாதித்தது. 50க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகளையே, காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கைப்பற்றியது.

இந்நிலையில், ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது; நாளை ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

இந்த தேர்தலில், 20 ஆண்டுகளாக எதிரும், புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் தாக்கரே - மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி வைத்துள்ளனர்.

அதுபோல, துணை முதல்வர் அஜித் பவார், தன் குருவான சரத் பவாருடன், புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சிகளில் கை கோர்த்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில், வஞ்சித் பகுஜன் அகாடி, ராஷ்ட்ரீய சமாஜ் ஆகிய கட்சிகளுடன், காங்., கூட்டணி வைத்துள்ளது.

மாநகராட்சி தேர்தலை, ஆளும் மஹாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ., - சிவசேனா இணைந்து எதிர்கொள்கின்றன.

மும்பை, புனே, நாக்பூர் உட்பட, 29 மாநகராட்சிகளில் உள்ள, 2,869 இடங்களுக்கு இன்று காலை 7:30 மணிக்கு துவங்கி, மாலை 5:30 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம், 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 1,700; புனேயில், 1,166 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் மொத்தம், 3.48 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதை முன்னிட்டு, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பலத்த போட்டி



சத்ரபதி சம்பாஜி நகர், நவி மும்பை, நாக்பூர், மும்பை, சோலாப்பூர், அமராவதி, புனே உள்ளிட்ட மாநகராட்சிகளில் அனைத்து கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

ஆளும் மஹாயுதி கூட்டணியில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தனர்.

அதே நேரம், உத்தவ், ராஜ் தாக்கரே ஆகியோர் மும்பை, தானே, நாசிக், சத்ரபதி சம்பாஜி நகர் ஆகிய மாநகராட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தினர். சொல்லப் போனால், மஹாராஷ்டிராவில் இன்று மினி சட்டசபை தேர்தலே நடக்கப் போகிறது.

@block_B@ மல்லுக்கட்டும் கட்சிகள் ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பையை கைப்பற்ற, அனைத்து கட்சிகளும் மல்லுக்கட்டுகின்றன. காரணம், இந்த மாநகராட்சியின் ஆண்டு பட்ஜெட் மட்டும், 74,000 கோடி ரூபாய். இது மற்ற மாநிலங்களின் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகம். மொத்தமுள்ள 227 வார்டுகளில், மஹாயுதி கூட்டணியில் பா.ஜ., 137; சிவசேனா 90 வார்டுகளில் போட்டியிடுகின்றன. அஜித் பவாரின் தேசியவாத காங்., 90 இடங்களில் மட்டும் தனித்து போட்டியிடுகிறது. உத்தவ் சிவசேனா - 163; மஹா., நவநிர்மாண் சேனா - 52 வார்டுகளில் போட்டியிடுகின்றன. காங்., - 143; வஞ்சித் பகுஜன் அகாடி - 46 வார்டுகளில் களம் காண்கின்றன. 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவசேனா, கட்சி பிளவுக்கு பின் சந்திக்கும் முதல் தேர்தல் இது.block_B

Advertisement