அதிகாரிகள் மிரட்டலால் 'பார்'களில் ஹிந்தி அழிப்பு

20

திருப்பூர்: திருப்பூரில் உள்ள டாஸ்மாக் பார்களில், ஹிந்தி எழுத்துக்கள் மறைக்கப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகள் மிரட்டியது தெரிய வந்துள்ளது.

திருப்பூர் சுற்று பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் செயல்படும் தனியார் பார்கள், என்.எச். ரோட்டை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பார்களின் பெயர் பலகை மற்றும் செல்லும் வழியை குறிப்பிட்டு ஹிந்தியில் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழர்கள் ஹிந்தி கற்கக்கூடாது. ஆனால், டாஸ்மாக் பார் போர்டில் மட்டும் ஹிந்தி வேண்டுமா? இதுவே தி.மு.க.வினர் ஹிந்து எதிர்ப்பின் இரட்டை வேடம்' என, பேசினார்.

இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்களை அழைத்து, 'ஹிந்தியில் போர்டு எழுதி வைத்தால், அந்த பார்களுக்கு சரக்கு வழங்க மாட்டோம்' என, மிரட்டியுள்ளனர்.

இதனால், பார் உரிமையாளர்கள், இங்கு ஹிந்தி கூடாது என்பதை, 'ஹிந்தி கோ நஹின் கரனா சாக்யே' என ஹிந்தியில் எழுதி, போர்டிலுள்ள ஹிந்தி எழுத்துகளுக்கு, கருப்பு பெயின்ட் அடித்து அழித்தனர்.

திருப்பூரில், டாஸ்மாக் அதிகாரிகளின் மிரட்டலுக்கு பணிந்து, பார் உரிமையாளர்கள் ஹிந்தி எழுத்துக்களை அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement