கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த புறநகர் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராம்நகர்: கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த புறநகர் திட்டத்துக்காக, ராம்நகர் எல்லையில் உள்ள இரு கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து, நகர வருவாய் கட்டடத்தில் உள்ள கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தின் முன், 26 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த புறநகர் திட்டத்தின் கீழ், பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியின் எல்லையில் உள்ள பைரமங்களா, கஞ்சுகரனஹள்ளி கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக, ராம்நகரில் நகர வருவாய் கட்டடத்தில் உள்ள கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தலைமையில் விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது.

இதையறிந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர், ஆணைய அலுவலகம் முன் கூடினர். அப்போது அவர்கள், 'எங்கள் நிலம் எங்கள் உரிமை; அதை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என்று கோஷம் எழுப்பினர். அத்துடன், எம்.எல்.ஏ.,வுக்கும், அரசுக்கும் எதிராகவும் கோஷங்கள் போட்டனர்.

இதையறிந்து வெளியே வந்த எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, ''இது அரசின் திட்டம். இத்திட்டத்தை என்னால் ரத்து செய்ய முடியாது. உங்கள் குறைகளை என்னிடம் கூறுங்கள். நான் அரசின் கவனத்து கொண்டு சென்று தீர்த்து வைக்கிறேன்,'' என்றார்.

அதற்கு உடன்படாத விவசாயிகள், 'திட்டத்தை ரத்து செய்து எங்கள் நிலத்தை எங்களிடம் விட்டு விட வேண்டும்' என்றனர். அதற்கு பாலகிருஷ்ணா, 'அது என் கையில் இல்லை' என்று கூறிவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்குள் சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் வெளியே வந்த பாலகிருஷ்ணா, விவசாயிகளை மீண்டும் சமாதானப்படுத்த முயற்சித்தார். அப்போதும், விவசாயிகள் கேட்கவில்லை.

பின் போலீஸ் உதவியுடன், அலுவலகத்தில் இருந்து எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா வெளியே புறப்பட்டு சென்றார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement