பகீர்! 'சட்டவிரோதமாக பெங்களூரு வருகின்றனர் வங்கதேசத்தினர்' மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கவலை

பெங்களூரு: 'வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக மேற்குவங்க மாநிலத்திற்கு வந்து, அங்கிருந்து ரயில்களில் பெங்களூரு வருகின்றனர். அப்படி வருவது வருங்காலத்தில், பெங்களூருக்கு அபாயத்தை ஏற்படுத்தும்' என, கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கவலை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் நபர்கள், மேற்குவங்க மாநிலம் வழியாக, பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அடைக்கலம் பெறுகின்றனர். அதேபோன்று, கர்நாடகாவிலும் சட்டவிரோதமாக வங்கதேசத்தவர் வசிக்கின்றனர். குறிப்பாக, பெங்களூரில் அதிகமாக வசிக்கின்றனர்.

புறநகர் பகுதிகளில் வசிக்கும் அவர்கள், தங்களை இந்திய குடிமக்கள் என்று கூறி வருகின்றனர். அசாம், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஸ்கர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என, பொய்யான ஆவணங்களை உருவாக்கி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என, அனைத்து ஆவணங்களையும் பெறுகின்றனர். அரசின் சலுகைகளையும் பெறுகின்றனர்.

அபாயம்

இவர்களில் பலர் குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். மாநில அரசும் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவரை கண்டுபிடித்து, நாடு கடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட வங்கதேசத்தவர் சிலர் கண்டுபிடிக்கப்பட்டதை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதிப்படுத்தினார்.

மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூருக்கு வரும் ரயில்களில், சட்டவிரோதமாக வங்கதேசத்தவர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, கர்நாடக சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதியுள்ள கடிதம்:

மேற்கு வங்கம் மற்றும் பெங்களூரு இடையே, தற்போது, 15 முதல் 17 வாராந்திர ரயில்கள் மற்றும் தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களை சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் ஊடுருவிய வங்கதேசத்தவர் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, பொது மக்கள் எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

மேற்கு வங்கம் - பெங்களூரு இடையேயான ரயில் பாதையில், பயணிக்கும் பலர், போலியான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்துவது கவலைக்குரிய விஷயமாகும். இத்தகைய போலியான ஆவணங்கள், குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை என, நீதிமன்றங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. போலியான ஆவணங்களுடன் ஊடுருவும் வங்கதேசத்தவரால், பெங்களூருக்கு அபாயம் ஏற்படலாம்.

பயோமெட்ரிக்

வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக ஊடுருவுவதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான ரயில் நிலையங்களில், போலியான ஆவணங்கள் வைத்திருப்போரை கண்டுபிடிக்க, பயோ மெட்ரிக் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

பயோமெட்ரிக் மூலம் அவர்கள் வைத்துள்ள ஆவணங்கள் உண்மையானவையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

ரயில்கள், ரயில் நிலையங்களில் ஆர்.பி.எப்., மற்றும் உளவுத்துறை ஊழியர்களை நியமித்து, சந்தேகத்திற்குரிய நபர்களை ரகசியமாக கண்காணிக்க வேண்டும். ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறையை, தேசிய அளவிலான டேடாபேஸ் உடன் இணைக்க வேண்டும்.

இந்திய எல்லை பாதுகாப்பு மற்றும் நகரங்களின் பாதுகாப்பு, இந்திய ரயில்வே துறையை நம்பியுள்ளது. இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisement