மாபெரும் மாற்றத்தில் இந்திய நுகர்வு முறை: முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

இந்தியாவின் நுகர்வு முறையில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பது குறித்து, டி.பி.எஸ்., நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்தியர்களின் செலவிடும் முறையிலும், அவர்களின் விருப்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் இன்று நுகர்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 62 சதவீத பங்கு தனிநபர் நுகர்வு வாயிலாகவே கிடைக்கிறது.

மாறும் முன்னுரிமைகள்



கடந்த காலங்களில், இந்திய குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும்பகுதி, உணவிற்காகச் செலவிடப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. நுகர்வோர் செலவின ஆய்வின்படி, உணவுக்கான செலவு குறைந்து, விருப்பத்தேர்வு சார்ந்த பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்பட்ட வாகனங்கள் மற்றும் ஏசிகள், இன்று நகர்ப்புறம் மட்டுமின்றி; கிராமப்புற வீடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களாக மாறி வருகின்றன.

விரைவான எழுச்சி



முன்பெல்லாம் பெரிய வினியோகக் கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களே சந்தையை ஆண்டு வந்தன. ஆனால் இன்று, 'குயிக்-காமர்ஸ்' மற்றும் நேரடியாக நுகர்வோரை சென்றடையும் நிறுவனங்கள், பாரம்பரிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. உதாரணமாக, 'ஆப்பிள்' நிறுவனம் இந்தியாவில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே, பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் 'ஹிந்துஸ்தான் யூனிலீவர்' நிறுவனத்தின் வருவாயை முந்தியுள்ளது.

இந்தியாவின் பங்குச் சந்தையும் கணிசமான வளர்ச்சியை கண்டு உள்ளது. ஒவ்வொரு புதிய ஐ.பி.ஓ., வாயிலாகவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறதே தவிர, குறையவில்லை.

அத்துடன் சமீபத்திய ஆண்டுகளில் முற்றிலும் புதிய வணிகப் பிரிவுகள் உருவாகியுள்ளன. அவற்றில் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவிலேயே உள்ளன.

உதாரணத்துக்கு மின்னணு வர்த்தக தளங்கள், 'டி டூ சி' எனும் நேரடியாக நுகர்வோரை அடையும் வணிகங்கள், மின்னணு உற்பத்தி சேவைகள், காப்பீட்டுத் தளங்கள், விண்வெளித் துறைக்கான பிரத்யேக பொறியியல் நிறுவனங்கள் போன்றவற்றை கூறலாம்.

இந்தத் துறைகள் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை மற்றும் மாறிவரும் நுகர்வோர் கலாசாரத்தைச் சார்ந்து இயங்குபவை.

குறுகிய காலத்தில் சந்தை முன்னிலை மாறினாலும், நீண்ட காலச் செல்வ உருவாக்கம் என்பது, மூன்று விஷயங்களைப் பொறுத்தே அமைகிறது: வளர்ச்சித் திறன், வாய்ப்பின் அளவு மற்றும் ஒரு நிறுவனத்தின் போட்டித் திறன் ஆகியவையே அவை.

செய்ய வேண்டியது



நீண்டகால நோக்கு மற்றும் ஏற்ற இறக்கங்களைத் தாங்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்களுக்கு: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்வது, கடந்த காலத்தைப் போலவே மிகப்பெரிய செல்வத்தை உருவாக்க உதவும்.

நீண்ட கால முதலீடு என்பது, சந்தையில் அவ்வப்போது ஏற்படும் அதிகப்படியான விலை உயர்வைக் கடந்து, வளர்ந்து வரும் வணிகக் கதைகளில் பங்கெடுக்க உங்களை அனுமதிக்கும்.

பாதுகாப்பை விரும்புபவர்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கும் குறைவான கால அவகாசம் கொண்டவர்களுக்கு: தற்போது சந்தை, அதிக விலை மதிப்பீட்டில் இருப்பதாலும், நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும், ஒரு பன்முகப்படுத்தப்பட்ட அல்லது கலப்பு முதலீட்டு முறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.


@block_Y@

முக்கிய அம்சங்கள்



பிரீமியமாக்கல்: நுகர்வோர் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள விரும்புவதால், பிரீமியம் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

தகர்க்கப்படும் தடைகள்: எளிதான கடன் வசதிகள், வலுவான வினியோகத் தொடர் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவை ஆடம்பரப் பொருட்களையும் சாதாரண மக்களுக்கு எட்டக்கூடியதாக மாற்றியுள்ளன.

பிராண்டு விசுவாசம்: டிஜிட்டல் ஊடுருவல் மற்றும் எளிதான போக்குவரத்து வசதிகளால், நுகர்வோருக்குப் பல தேர்வுகள் கிடைப்பதால், பழைய பிராண்ட் விசுவாசம் குறைந்து வருகிறது.

புதிய முதலீட்டுத் துறைகள்: மின்னணு-வணிகம் மின்சார வாகனங்கள் , டிஜிட்டல் காப்பீட்டுத் தளங்கள் போன்ற புதிய துறைகள் இந்தியாவின் நுகர்வுப் பாதையை மாற்றி அமைக்கின்றன.

பாரம்பரிய சந்தைக்குச் சவால்: பெயின்ட், கேபிள்கள் மற்றும் மளிகை சில்லரை வர்த்தகம் போன்ற துறைகளில் பலமான புதிய நிறுவனங்கள் நுழைந்து உள்ளதால், சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது.block_Y

Advertisement