யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்

4


வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரத்தில் யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது. அதை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும். என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.


ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக இது இருந்தாலும், தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கலோஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை, அமெரிக்கப் படைகள் சமீபத்தில் கைது செய்தன.


போதைப் பொருள் பயங்கரவாதத்தை அவர்கள் ஊக்குவிப்பதாகக் கூறி, அமெரிக்காவில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இருவரும் தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல நாடுகளின் போர்களை நிறுத்துவதற்கு உதவிய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.


அது கிடைக்காத நிலையில், தற்போது தன் ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டி வருகிறார். அத்துடன், வரி விதிப்பு என்ற மிகப் பெரிய ஆயுதத்தையும் கையில் எடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில், அந்த நாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ராணுவத்தை அனுப்பவா' என்று ஈரானுக்கு மிரட்டல் விடுத்தார் டிரம்ப்.
இந்த சூழ்நிலையில், ஆர்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்தை அவர் குறி வைத்துள்ளார். ஆர்டிக் பகுதியில், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் ஆதிக்கத்தை தடுக்க, கிரீன்லாந்து தன் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.


இதற்கு, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், எப்படியாவது கிரீன்லாந்து தன் கைவசம் வரும் என்று டிரம்ப் கூறி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, கிரீன்லாந்து விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் இன்று (ஜனவரி 17) மிரட்டல் விடுத்துள்ளார்.


எங்களுக்கு கிரீன்லாந்து வேண்டும். அது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. அதனால், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இல்லாத நாடுகள் மீது வரி விதிப்பதை தவிர வேறு வழியில்லை, என, டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement