அ.தி.மு.க.,வின் 5 தேர்தல் வாக்குறுதிகள்; பின்னணியில் ஜோதிடர்கள் அறிவுரை?

19

ஜோதிடர்களின் அறிவுரைப்படி, சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., முதல் கட்டமாக 5 வாக்குறுதிகளை, அக்கட்சியில் பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


@1brஅ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின், 109வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை, 11:00 மணிக்கு மேல், அ.தி.மு.க.,வின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை பழனிசாமி அறிவித்தார்.


நேற்று, திதி மற்றும் சுப ஓரை, பழனிசாமிக்கு சாதகமாக இருந்ததால், ஜோதிடர்கள் அறிவுரைப்படி, ஐந்து தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவித்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:




தமிழகத்தில், 17வது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 17ம் தேதியான நேற்று கரிநாள். கடவுள் நம்பிக்கை இல்லை என கூறும், தி.மு.க., கூட எந்த புதிய அறிவிப்பையும் கரிநாளில் வெளியிடாது. ஆனால், கடவுள் நம்பிக்கை கொண்ட பழனிசாமி, ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.


ஜோதிடர்களின் ஆலோசனை பெற்று தான், இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நேற்று, சிவராத்திரி மற்றும் சதுர்த்தசி திதி நாள். அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இருந்து வரும் 14வது நாள் சதுர்த்தசி திதி. அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை சுக்கிலபட்ச சதுர்த்தசி என்றும், பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை, 'கிருஷ்ண பட்ச சதுர்த்தசி' என்றும் கூறுவர்.


ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகை, ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் தான் கொண்டாப்படுகிறது. இது, 'நரக சதுர்த்தசி' என்றும் அழைக்கபடுகிறது. இந்நாளில் தான் பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை அழித்தார். மேலும், சதுர்த்தசி திதி என்பது காளி தேவிக்கு உகந்த நாள், தடைகளை நீக்கி முன்னேற உதவும் நாள்.



சனிக்கிழமையில் வரும் சதுர்த்தசி திதி, நல்ல பலன்களைத் தரும். இது தவிர, காலை, 9:40 மணிக்கு மேல், பூராடம் நட்சத்திரம் என்பதால், அதில் செய்யும் காரியம் வெற்றியடையும். அதை கணக்கிட்டே, நேற்று காலை 11:30 மணிக்கு மேல், தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.


மேலும், காலை, 11:00 முதல், 12:00 மணி வரை புதன் ஓரை; மதியம், 12:00 முதல், 1:00 மணி வரை சந்திரன் ஓரை காலமாகும். சனிக்கிழமைகளில் சனி ஓரை, செவ்வாய் ஓரை போன்ற அசுப ஓரையை தவிர்த்து, குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஓரைகளில் முக்கிய பணியை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.



இதனால் தான், புதன் மற்றும் சந்திர ஓரை நேரத்தை தேர்வு செய்து, தேர்தல் வாக்குறுதியை, ஜோதிடர்கள் அறிவுரைப்படி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



- நமது நிருபர் -

Advertisement