தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு முன்பணம் செலுத்த ஆர்.பி.ஐ., தடை
பண மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்காக முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஆர்.பி.ஐ.,யின் புதிய அன்னிய செலாவணி விதிமுறைகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள், தங்கம் வாங்குவதாக கூறி வெளிநாடுகளுக்கு முன்பணம் அனுப்பி விடுகின்றனர். ஆனால், சில சமயங்களில் பணம் சென்றடைந்த பின்னும், அதற்கான தங்கம் அல்லது வெள்ளி இறக்குமதி செய்யப்படுவதில்லை. இந்த ஓட்டையை பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், இதை தடுக்கவே, ஆர்.பி.ஐ., நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நம் நாடு அதிக இறக்குமதி செய்யும் பொருட்களில் கச்சா எண்ணெய்க்கு அடுத்ததாக தங்கம் உள்ளது. அதிக மதிப்புள்ள இந்த பரிவர்த்தனைகள் வாயிலாக தவறான வழியில் நிதி செல்வதை தவிர்க்க, வங்கிகள் இனி இறக்குமதிக்கு பின் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கான அன்னிய செலாவணி விதிகளில் ரிசர்வ் வங்கி சில தளர்வுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, மூன்றாம் தரப்பு வாயிலாக பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.