வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!

5


டாக்கா: வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர், கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு ஏற்பட்ட, முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்துக்குப் பின், ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த, 2022 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வங்கதேசத்தில், 1.13 கோடி ஹிந்துக்கள் உள்ளனர்; அதாவது மக்கள்தொகையில், 8 சதவீதம் உள்ளனர்.கடந்தாண்டு டிசம்பரில் மட்டும், ஹிந்துக்களுக்கு எதிராக, 51 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


வரும், பிப்., 12ல் பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், காரில் வந்தவர்கள், பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பி செல்ல முயன்றனர். அதை தடுக்க முயன்ற, ரிபான் சாஹா, 30, என்ற ஹிந்து ஊழியர் மீது, காரை ஏற்றிக் கொன்று தப்பினர்.


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் பயணித்த, அப்துல் ஹஷீம், டிரைவர் கமல் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அப்துல் ஹஷீம், வங்கதேச தேசியவாத கட்சியின் மாவட்ட பொருளாளராக இருந்தவர்.

தொடரும் அநீதி




வங்கதேசத்தில் வன்முறை மீண்டும் தலை தூக்கிய பிறகு, முதலில் மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்ற இளைஞர் மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.


அப்போதும் விடாத காட்டுமிராண்டி கும்பல் சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி 'தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். பின்னர் தொடர்ந்து ஹிந்துக்கள் கொல்லப்படும் சம்பவம் அரங்கேறியது. தற்போது பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஹிந்து ஊழியர் மரணத்தை தொடர்ந்து வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துகள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement