ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஒராண்டில், 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனர்; 12 மாதங்களில், 924 குழந்தைகள் பயனடைந்தன.



திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2021 ஆக. மாதம் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டது. 'உபரி தாய்ப்பாலை தானமாக வழங்க விரும்புவோர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்,' என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஒராண்டில், 539 தாய்மார்கள் மனமுவந்து வழங்கிய தாய்ப்பால் தானம் வாயிலாக, 924 குழந்தைகள் நலம் பெற்றுள்ளனர். 2023ம் ஆண்டு வரை தாய்ப்பால் வங்கி செயல்பாடுகள் சற்று குறைந்திருந்தது. தானம் அளிக்க பலரும் முன்வராத நிலையில், தன்னார்வ, தொண்டு அமைப்புகள் உதவியுடன் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தாய்ப்பால் வங்கி செயல்பாடுகள் வேகம் பெற்றுள்ளன.

வரவேற்கிறோம்




இது குறித்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 'டீன்' மனோன்மணி கூறியதாவது: தானமாக பெறப்படும் தாய்ப்பால் சுத்திகரிப்பு செய்த பின்னரே, குழந்தைகளுக்கு புகட்டப்படுகிறது. மாவட்டத்தில் தாய்ப்பால் வங்கி நம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மட்டுமே செயல்படுகிறது.


தேவை, சூழல் அறிந்து பிற அரசு மருத்துவமனைகளுக்கும் அவ்வப்போது உதவி செய்து, குழந்தைகளை காப்பாற்றுகிறோம். இதற்கு தனி மகப்பேறு மருத்துவர் குழு செயல்படுகிறது. உபரியாக தாய்ப்பால் இருந்தால், 24 மணி நேரமும் வழங்க தாய்மார்கள் முன்வரலாம். அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறோம்.


தமிழக அரசு சிசு இறப்பு விகிதத்தை குறைக்க, ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் உடனடி நலம் பெறச் செய்ய தாய்ப்பால் வங்கி துவக்கியுள்ளது. தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு, தானமாக பெறப்படும் தாய்ப்பால் தான் உயிர்.


இதனை முன்னரே அறிந்து தாய்ப்பால் வங்கியில் இருப்பு வைக்கப்படும் தாய்ப்பால் உடனடியாக பிறந்த குழந்தைக்கு புகட்டப்படுகிறது. கடந்தாண்டில், 924 பச்சிளம் குழந்தைகள் தானமாக பெறப்பட்டுள்ள தாய்ப்பால் மூலம் நலம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement