பாக்., முன்னாள் பிரதமரின் பேரன் திருமணம்: மணமகள் அணிந்தது இந்திய ஆடைகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பேரன் திருமண விழாவில், இந்திய ஆடை வடிவமைப்பாளர் கள் வடிவமைத்த ஆ டை களை மணமகள் அணிந்திருந்தது விமர்ச னங்களை ஏற்படுத்தியுள்ளது.


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வரும், நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாசின் மகன் முகம்மது ஜுனைத் சப்தார். இவருக்கும், அந்நாட்டின் பிரபல தொழிலதிபர் ரோஹைல் அஸ்கரின் மகள் ஷன்சே அலி ரோஹைலுக்கும், சமீபத்தில் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலை நகர் லண்டனில் திருமணம் நடந்தது.


இது, மணமகன் ஜுனைத்தின் இரண்டாவது திருமணம் ஆகும். கடந்த 2021ல் நடந்த முதல் திருமணம், 2023 அக்டோபரில் விவாகரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ஜுனைத் -  ஷன்சே திருமண வரவேற்பு உள்ளிட்ட கொண்டாட்டங்கள், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நவாஸ் ஷெரீப் இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்தது.


இதில் நவாஸ் ஷெரீப் சகோதரரும், அந்நாட்டின் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


திருமணத்தின் பல்வேறு சடங்குகளுக்காக மணமகள் ஷன்சே அலி, இந்தியாவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களான சபையசாச்சி மற்றும் தருண் தஹிலியானி ஆகியோர் வடிவமைத்த ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார்.


இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமாக இருக்கும் நிலையில், இந்திய ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய ஆடையை மணமகள் அணிந்தது அந்நாட்டில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


இதைத் தவிர, பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வேளையில், பல லட்சம் ரூபாய் ஆடைகளுடன் ஆடம்பரமாக திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement