கும்மி, தெம்மாங்கு பாடி கொண்டாடப்பட்ட சங்க இலக்கிய 'சிறுவீட்டுப் பொங்கல்': பூ எருவாட்டித் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்த மக்கள்
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோவில்பட்டியில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த 'சிறுவீட்டுப்' பொங்கல், பரிணாமம் பெற்று 'பூ எருவாட்டித் திருவிழாவாக' ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நேற்று இக்கிராமத்தில் இத்திருவிழா விமர்சையாக நடந்தது.
பொங்கல் விழா பிறப்பு, இறப்புக் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழாவாகும். பொங்கல் அன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று, வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் படைக்கும் வழக்கம் இன்றும் நடந்து வருவதே இதற்குச் சான்றாகும்.
தைப்பொங்கலுக்கு முன்பாக வரும் சந்தி மறித்து பொங்கல், சப்த கன்னி பொங்கல் வரிசையில் 'சிறுவீட்டுப்' பொங்கல் இயற்கை சார்ந்த திருவிழாவாக நடந்துள்ளதாக சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வத்தலக்குண்டு அருகே கீழக்கோவில்பட்டியில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 'சிறுவீட்டுப் பொங்கல்' விழா, பூ எருவாட்டி திருவிழா என பரிணாமம் பெற்று தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
மார்கழியில் வீட்டு வாசலில் கோலமிட்டு பூசணி, செம்பருத்தி, எருக்கு பூக்களை சாண உருண்டையில் இட்டு கோலத்தின் நடுவே வைக்கும் பழக்கம் இக்கிராமத்தில் இன்றளவும் உள்ளது. சாண உருண்டைகளை எருவாட்டியாக்கி, பூசணி பூக்களை நான்காக கிழித்து, அதன் மீது ஒட்டி காய வைத்து பூ எருவாட்டியாக தயாரிப்பர்.
பொங்கல் முடிந்த 3ம் நாளான நேற்று பகவதி அம்மன் கோயில் முன்பாக, இந்த பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து ''தானானே..., தானானே...'' என, கும்மியடித்து, தெம்மாங்கு பாடினர். பின் மருதாநதியில் எருவாட்டி மீது வெற்றிலையை வைத்து சூடம் ஏற்றி குலவைச் சத்தத்துடன் நீரில் கரைத்து வழிபாடு நடத்தினர்.