புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் சுற்றுலா பயணிகளுக்கு 6 நாள் தடை

திருநெல்வேலி: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு பணி திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜன., 19) துவங்கி ஜன., 24 வரை நடக்கிறது. இந்நாட்களில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு வனக்கோட்டங்களுக்குட்பட்ட பாபநாசம், கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஏழு வனச்சரக பகுதிகளில் இப்பணி இன்று முதல் ஜன., 24 வரை 6 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் நடந்த பயிற்சி முகாமில் வனச்சரகர்கள் தலைமையில் வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 200 பேர் பங்கேற்றனர்.

எம்.ட்ரைப்ஸ் எனும் பிரத்யேக மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு செய்வது, புலிகளின் கால் தடங்களை ஆய்வு செய்வது, வாழ்விடம், இரை உயிரினங்களின் கிடைப்புத் தன்மை, மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் அழுத்தங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வது குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் கோட்டத்தில் 34 பீட்களில் இக்கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு பீட்டிலும் 5 பேர் வீதம், வனச்சரகர்கள் தலைமையில் 170 பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர்.

சுற்றுலா தலங்களுக்கு தடை இப்பணி நடக்கும் இன்று முதல் ஜன., 24 வரை பாபநாசம், களக்காடு, மணிமுத்தாறு வன சோதனைச்சாவடிகள் மூடப்படுகின்றன. மேலும் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணை, காரையாறு, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை 2027ல் மத்திய அரசால் வெளியிடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement