இந்த வாரம் எப்படி இருக்கும்?

டவுனு: வாங்க நியுட்ரன்... வாரத்தில ஒரு நாளும், வாராந்திர ரீதியாவும் ஒரு வாய்ப்பு கிடைச்சுடுச்சு போல இருக்கு?

நியுட்ரன்: ரொம்ப புகழாதீங்க! நீங்க போன வாரம் பேசும் போது, ஏற்றம் வந்தா அது தற்காலிகமானதா இருக்குமுன்னு சொன்னீங்க. உங்க வாய் முகூர்த்தம் பலிச்சுடுச்சு.

அப்பு: என்ன ஒரு தன்னடக்கம்!

நியுட்ரன்: வர்ற வாரம் எம்3 பணப்புழக்கம், ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களோட பி.எம்.ஐ., குறியீடு, வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகளும், ஜி.டி.பி., வளர்ச்சி, தனிநபர் வருவாய் மற்றும் செலவுகள், எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களோட பி.எம்.ஐ., குறியீடு, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்கு.

டவுனு: 25,479/25,263/25,100 போன்ற லெவல்கள்ல, வாராந்திர சப்போர்ட்டும்; 25,905/26,116/26,278 போன்ற லெவல்கள்ல வாராந்திர ரெசிஸ்டென்சும் இருக்குது.

அப்பு: 175-க்கும் மேற்பட்ட நிறுவனங்களோட காலாண்டு முடிவுகளும் வெளிவர இருக்குது இல்லையா?

நியுட்ரன்: குறுகிய கால அடிப்படையில் பார்த்தால், நிப்டி கரெக்ஷன் மோடுக்கு போன மாதிரித்தான் தெரியுது. ஆர்.எஸ்.ஐ., 50-க்கு கீழே இருக்குது. எம்.ஏ.சி.டி., எதிர்மறை நிலையில இருக்குது. இதனால பெரிய மாறுதல் இல்லாமல், அல்லது சிறிய இறக்கத்தோட தான் செயல்பட வாய்ப்பிருக்கு.

டவுனு: நீங்க சொல்லுறதப் பார்த்தா, உங்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைச்சுடுமோ?

அப்பு: காலாண்டு முடிவுகள், செய்திகள்னு ஏதாவது சந்தைக்கு செம ஆதரவா இருந்தா தான் ஏற்றம் அப்படீன்னு சொல்லாம சொல்றார் நியுட்ரன்.

டவுனு. இன்னும் சொல்லப்போனா, 26,000- புள்ளிகளுக்கு மேலே போனா உங்களுக்கான வாய்ப்பும்; 25,100 புள்ளிகளுக்கு கீழே போனா, எனக்கான வாய்ப்பும் இருக்குன்னு சொல்லலாம் அப்பு. குறிப்பா இதுதான் திசைங்கிறது இந்த லெவல்களை தாண்டினாத் தான் உறுதியா சொல்லமுடியும்.

நியுட்ரன்: அட, ரொம்ப அனலைஸ் பண்ணீட்டு வந்திருப்பீங்க போல!

டவுனு: ஆமாம். பிழைப்பு இதுன்னு ஆயிடுச்சு. குழப்பமான சூழ்நிலையில ரொம்ப தீவிர ஆராய்ச்சி பண்ணவேண்டியிருக்குல்ல?

அப்பு: 25100-க்கும் 26,000-த்திற்கும் இடையில ஏறி இறங்கிக்கிட்டு இருந்தாலே வாய்ப்புகள் கிடைக்குமே?

டவுனு: அதுலதாங்க சிக்கல். செய்திகளுக்கு ஏற்ற மாதிரி, ஓப்பனிங்கிலேயே படு ஏற்றத்தோடவும், படு இறக்கத்தோடவும் நடந்துடுச்சுன்னா வியாபாரத்துக்கான வாய்ப்பு அதிகமா இல்லாம போயிடும்.

நியுட்ரன்: அப்படீன்னா?

டவுனு: ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கும். நாள் பூரா நியுட்ரன் கை ஓங்கியிருக்கும். வியாபாரம் பண்ண முடியாம கையைப் பிசைஞ்சுகிட்டு வேடிக்கை பார்க்கற மாதிரி ஆகிடும்.

அப்பு: அப்படி நடக்கலாம்னு எதிர்பார்க்கறீங்களா?

டவுனு: குழப்பமான சூழ்நிலையில ஒரு நல்ல விஷயம் கிடைச்சாலும்; ஓப்பனிங்கிலேயே எபெக்ட் வந்துடும். அதனாலதான் அப்படி சொல்றேன்.

நேரமாயிடுச்சு. எங்க ஏரியாவுல நடக்குற பொங்கல் விழா போட்டியில என்னை பரிசு வழங்கறதுக்கு கூப்பிட்டுருக்காங்க. இப்ப போனா சரியா இருக்கும் - என்று சொல்லி நியுட்ரன் கிளம்ப, மற்ற இருவரும் கூடவே கிளம்பினர்.

Advertisement