3 வீடு, கார், ஆட்டோவுடன் ஆடம்பரம்; மிரள வைத்த கோடீஸ்வர யாசகர்

17

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில், மூன்று வீடுகள், கார், மூன்று ஆட்டோக்கள், வட்டி பணம் என, பல கோடி ரூபாய்க்கு யாசகர் ஒருவர் அதிபராக இருப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2024 பிப்ரவரி முதல் இந்துாரில், தெருக்களில் திரியும் யாசகர்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


அந்த வகையில், ஒரு யாசகரை மீட்டபோது, அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பது கண்டு, அதிகாரிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அந்த யாசகரின் பெயர் மங்கிலால். தற்போது அல்வாசா என்ற பகுதியில் பெற்றோருடன் அவர் வசித்து வருகிறார்.


யாசகம் மூலம் சம்பாதித்த பணத்தில், இந்துாரின் பகத் சிங் நகர், ஷிவ் நகர் மற்றும் அல்வாசாவில் மூன்று வீடுகளை அவர் வாங்கி இருக்கிறார். அதில் ஒரு வீடு மூன்று அடுக்குமாடிகளை கொண்டது.


இது தவிர, மூன்று ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார். 'மாருதி சுசூகி டிசைர்' காருக்கும் மங்கிலால் சொந்தக்காரர். அந்த காரையும் வாடகைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.


இந்துாரின் சராபஸா பஜாரில், சிறு நகை வியாபாரிகளுக்கும் ரகசியமாக வட்டிக்கு பணம் தருகிறார். தினசரி அல்லது வாரந்தோறும் என்ற ரீதியில், அந்த வட்டி பணத்தை மங்கிலால் வசூலித்து வருகிறார். எனினும், யாசகம் செய்வதை அவர் விடவில்லை.


வங்கிக் கணக்குகள், கையிருப்பு, வட்டி மூலம் கிடைக்கும் பணம், வாடகை ஆட்டோக்கள், கார் மூலம் கிடைக்கும் வருவாய் என, மங்கிலாலின் சொத்து விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.


ஏற்கனவே மூன்று வீடுகள் வைத்திருக்கும் மங்கிலால், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் வாயிலாகவும், ஒரு வீட்டை கட்டி முடித்திருப்பதும் அதிகாரிகளை வாய் பிளக்க வைத்துள்ளது.


விரைவில், அவரை கலெக்டர் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளனர். அப்போது அரசு வீடு எப்படி கிடைத்தது என்பது குறித்து, அவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் யாசகர்கள் மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ், இந்துாரில் மட்டும், 6,500 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 4,500 பேருக்கு மாநில அரசின் திட்டங்கள் மூலம் கண்ணியமாக வாழ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,500 பேர் உஜ்ஜைன் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement