நோபல் பரிசு கிடைக்கவில்லை; அமைதி பற்றி எனக்கென்ன கவலை: அமெரிக்க அதிபர் புது முடிவு

17

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில், “அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இனி இல்லை,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இந்தியா - பாகிஸ்தான் மோதல் உட்பட உலகள வில் எட்டு போர்களை தாம் தடுத்து நிறுத்தி, அமைதியை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறினார்.


ஆனால், அவரது ஆசையை சுக்கு நுாறாக்குவது போல், கடந்தாண்டுக்கான நோபல் பரிசு, தென் அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.


கடந்த 3ம் தேதி வெனிசுலாவில் அதிரடியாக நுழைந்த அமெரிக்க ராணுவம், போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோராவை கைது செய்து அமெரிக்க சிறையில் அடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.


தங்கள் நாட்டு அதிபரை கைது செய்து வெனிசுலாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாகக் கூறி, மச்சாடோ தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கினார். இதை, பரஸ்பரம் மரியாதை என டிரம்ப் பாராட்டினார். ஆனால், நோபல் பரிசு குழு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


நோபல் பரிசு கை மாற்றப்பட்டாலும், அந்த பட்டம் அறிவிக்கப்பட்டவரின்றி வேறொருவருக்கு மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அதிபர் டிரம்ப், நோபல் பரிசு வழங்கும், ஐரோப்பிய நாடான நார்வேவின் பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அதில், 'எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே, இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. 'இருப்பினும், என் முதன்மையான முன்னுரிமை என்பது எப்போதும் அமைதிக்கானதாகவே இருக்கும்.


'தற்போது அமெரிக்காவுக்கு எது நல்லது மற்றும் சரியானது என்பது பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைத்துள்ளது' என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement