பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அ.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவித் துள்ளது. ஆண்கள், இலவச பஸ் பயணம் வேண்டும் என கேட்டனரா... இதனால், தமிழக அரசின் கடன், 10 லட்சம் கோடியிலிருந்து, 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

நீங்களும் காடு, மலை, ஆடுன்னு என்னென்ன மாநாடெல்லாமோ நடத்தினீங்க... இந்த இலவசங்களை ஒழிக்க தைரியமா ஒரு மாநாட்டை நடத்துங்க பார்ப்போம். அது வெற்றி கண்டுடுச்சின்னா, மக்கள் இலவசங்களை ஒதுக்கிட்டாங்கன்னு, 'டவுட்' இல்லாம, மற்ற கட்சிக்காரங்க புரிஞ்சிக்குவாங்க!


தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே, 'ஈ அடிச்சான் காப்பி' என்ற ரீதியில், தற்போது அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த தேர்தலில், மகளிருக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும் என பழனிசாமி கூறியிருந்தார். அதில், இப்போது, 500 ரூபாயை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏன் இப்படி, தலையைச் சுத்தி மூக்கைத் தொடுறீங்க... 'கடந்த, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்துல அறிவிச்ச தேர்தல் அறிக்கையை தான், தி.மு.க., ஸ்டாலின், 'ஈ அடிச்சான் காப்பி' போட்டிருக்காரு'ன்னு தைரியமா சொல்ல வேண்டியது தானே... நீங்க தைரியமா பேசாம இருந்தா, பா.ஜ.,வின், 'இமேஜ்' கொஞ்சம் கொஞ்சமா சரிந்து விடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரை, எந்த கட்சியையும் வெளியேற்றுவது கிடையாது. கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். எங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி எங்களுடன் இணைந்து தான், சட்டசபை தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கிறோம்.

உங்கள் ஆசை நிறைவேறியது எனில், உங்க கட்சிக்கு நல்லது. காங்கிரஸ் உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டால், அவர்கள் அணி மாறிச் செல்ல வேகமாய் காய் நகர்த்துவது புரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், கூட்டணி குறித்து அவர்கள் வாய் திறந்தே ஆக வேண்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: பா.ம.க., அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். நாணயமான, சிறந்த கூட்டணியை அமைப்போம். வரவிருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட, 4,000த்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க., தலைவர் அன்புமணியல்ல; நான் தான். பாம.க., பெயரை அவர் பயன்படுத்தினால், நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.

அன்புமணியை தானே, பா.ம.க., கட்சித் தலைவரா தேர்தல் ஆணையம் அங்கீகரிச்சிருக்கு... உங்கள் ஆசைப்படி, நீங்கள் தான் தலைவர் என்றாலும், வரவிருக்கும் தேர்தலில் உங்களால் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்ய இயலுமா... உங்கள் மகள் தமிழகத்திற்கு நல்லது செய்யும் விதமாய், ஆக்ரோஷமாய் பேசத் தயாரா இருக்காங்களாங்கிற சந்தேகமெல்லாம் தீர்ந்தா தான் மக்கள் ஓட்டு போடுவாங்கங்கறதுல, 'டவுட்'டே இல்லை!

Advertisement