இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனை; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

37


சென்னை: தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் இடம்பெற இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை நம்முடைய ஆட்சி செய்து இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் கான்வென்ட் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சிறுமலர் பள்ளிக்கு நான் வருவது இது முதல்முறையல்ல. 1984ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 40 ஆண்டு காலமாக இந்த பள்ளிக்கு வந்து தான் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் கொண்டாடி கொண்டு இருக்கிறேன். எந்தவொரு நிறுவனம் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரிய சாதனை. அதுவும் மாற்று திறன் உடைய மாணவர்களுக்காக நடத்தக்கூடிய ஒரு கல்வி நிறுவனம் 100 ஆண்டுகள் காண்பது என்பது பெருமைக்கூடிய சாதனை.



அப்படி 100 ஆண்டு கால சாதனை செய்த லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு வாழ்த்துக்கள். அழைக்கவில்லை என்றாலும் கூட லிட்டில் ப்ளவர் கான்வென்ட் பள்ளியின் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பேன். எம்எல்ஏ ஆனது முதல் முதல்வரானது வரை இந்த பள்ளியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். எனக்கு இந்த பள்ளிக்கும் நீண்ட நெடிய ஆழமான உறவு இருக்கிறது. இப்பொழுது சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நேரம், இருந்தாலும் இந்த பள்ளி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வந்து இருக்கிறேன்.


ஒருமுறை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிறுமலர் சிறப்புப் பள்ளிக்கு வந்தபோது, பினோ ஜெபின் என்ற மாணவி, தான் அமெரிக்காவில் நடைபெறும் இளம் தலைவர் மாநாட்டில் பங்கேற்க உதவ வேண்டும் என கடிதம் வழங்கினார். அப்போது கருணாநிதி முதல்வராக இருந்த நிலையில், இதனை எடுத்துச் சொல்லி சிறப்பு நிதியை விடுவித்தோம். அவரது பிறந்தநாள் அன்று அவரின் வீட்டிற்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தோம். அந்த பினோ ஜெபின்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவர். என் மனைவி எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்திலும் இதை நெகிழ்வோடு எழுதியுள்ளார்.


நமது அரசு தரக்கூடிய ஆதரவால் பாரா ஒலிம்பிக் உட்பட பல விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மாரியப்பன், தங்கவேலு, நித்யஸ்ரீ என பல ரோல் மாடல்கள் உருவாகி கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் இடம்பெற இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை நம்முடைய ஆட்சி செய்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏதாவது துறையில் சாதனை செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement