விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

35

புதுடில்லி: நடிகர் விஜயின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.


தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி, மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தனது முதல் தேர்தலுக்குத் தயாராகி வரும் நடிகர் விஜயின் தவெக, தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தைக் கோரி இந்திய தேர்தல் கமிஷனை அணுகியுள்ளது.


தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணைப்படி, புதுடில்லியில் உள்ள தேர்தல் கமிஷனிடம் விசில், ஆட்டோரிக்ஷா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் உள்ளது. பொதுவான சின்னங்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.


இந்நிலையில், தவெக கேட்ட விசில் சின்னமே கிடைத்துள்ளது. இதனை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதன் மூலம் முதல் தேர்தலில் பொது சின்னத்தில் தவெக போட்டியிட உள்ளது.

விசில் பின்னணி என்ன?



கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழ் படம் 'பிகில்' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. அதேநேரத்தில், இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

அதேபோல், கடந்த 2024ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில், 'சத்தம் பத்தாது விசில்போடு' என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார். இதுவே விஜயின் தவெக விசில் சின்னம் கோரி இருப்பதற்கு பின்னணியாக கருதப்படுகிறது.

கமல் கட்சிக்கு டார்ச் லைட்



கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement