விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்

9


சென்னை: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் முத்தரப்பு பேச்சு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, பேச்சு நடத்தாத இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியதே," என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.


சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது; விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம். 6 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்னும் 2 நாட்கள் தான் இருக்கிறது. இது 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னை, இதைக் கூட அரசு அக்கறையாக எடுத்து, அதற்குரிய பதில் கொடுப்பதற்கு என்ன?

பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கூட பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதியளிக்கப்பட்டது.

அப்போது, நிறைய கேள்விகளை எழுப்பினார்கள், நாங்கள் அதற்கான பதிலை கொடுத்தோம். ஆனால், இன்றைய தினம் இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் பேசக் கூடாது என்ற நிலைப்பாட்டினால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்கள் முடிவு





போராட்டம் நடத்துவது அரசுக்கு தெரியாதா? அப்படி தெரியவில்லை எனில் மோசமான அரசு என்று பொருள். 6 மாதங்களாக விவசாயிகள் தங்களின் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள், 2 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, நடத்தப்படவில்லை.

அரசு பின்வாங்குவது ஏன்? இது எல்லாம் அரசுக்கும், துறை அமைச்சருக்கும் தெரியவில்லை எனில், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டியது என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

இந்த அரசு விவசாயிகள் பக்கம் இல்லை. முதலாளிகள் பக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. 40 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பிரச்னையை அவையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டால், அவையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தோல்வி பயம்




2021 சட்டசபை பொதுத்தேர்தலின் போது முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது அதிமுக தான். அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். அமைச்சர்கள் எல்லாம் வேண்டுமென்றே தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். மகளிர் குல விளக்கு திட்டம் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தோம்.

மகளிருக்கு பஸ் பயணச்சலுகை உள்ளிட்டவை ஏற்கனவே அறிவித்த திட்டம் தான். தோல்வி பயத்தினால் தான், அதிமுக கொண்டு வந்ததால் நிறுத்திவைக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை மீண்டும் திமுக அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அப்போதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. 2026ம் ஆண்டு துவங்கிய இந்த 20 நாட்களில் 46 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 27 நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. நிரந்த சட்ட ஒழுங்கு டிஜிபியை நியமிக்காததே இதற்கு முக்கியக் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement