மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியின் சின்னர், போலந்தின் ஸ்வியாடெக் உள்ளிட்டோர் முன்னேறினர்.

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி மோதினர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் ஜோகோவிச் வெற்றி பெறும் பட்சத்தில், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 400வது வெற்றியை பதிவு செய்த முதல் வீரராகலாம்.
மற்றொரு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வீழ்த்தினார். அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-2, 6-2 ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனியை வென்றார்.


மற்ற 2வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, குரோஷியாவின் மரின் சிலிக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ஸ்வியாடெக் அபாரம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 7-5, 6-2 என பிரான்சின் வார்வரா கிராச்சேவாவை வென்றார்.

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-2 என, சகவீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லரை தோற்கடித்தார். அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-1, 6-4 என செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவை வீழ்த்தினார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 4-6, 6-2 என பெல்ஜியத்தின் சோரானா சிர்ஸ்டியாவை வென்றார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-1, 7-5 என சகவீராங்கனை ஆஷ்லின் க்ரூகரை வீழ்த்தினார்.

பாலாஜி ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஆஸ்திரியாவின் நீல் ஓபர்லீட்னர் ஜோடி 7-6, 3-6, 7-6 என பிரான்சின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சன் ஜோடியை வீழ்த்தியது.


* கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் நிக்கோல் மெலிசார்-மார்டினஸ் ஜோடி 4-6, 6-7 என சீனாவின் ஷுவாய் ஜாங், ஜெர்மனியின் டிம் புய்ட்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

மூத்த வீரர் வாவ்ரின்கா

ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்கா, பிரான்சின் ஆர்தர் கீயா மோதினர். நான்கு மணி நேரம் 33 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய வாவ்ரின்கா 4-6, 6-3, 3-6, 7-5, 7-6 என வெற்றி பெற்றார். இதன்மூலம் 1978க்கு பின், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு முன்னேறிய மூத்த வீரரானார் (40+) வாவ்ரின்கா (40 ஆண்டு, 310 நாள்). இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வெல், தனது 44வது வயதில் (1978) ஆஸ்திரேலிய ஓபனில் 3வது சுற்று வரை சென்றிருந்தார்.

Advertisement