பெங்களூருவில் கேரளக் கலைத் திருவிழா


கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கேரளாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையிலும் 'கேரளா சுற்றுலாத்துறை' சார்பில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2026-ஆம் ஆண்டில் கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள அம்மாநில சுற்றுலாத்துறை, இத்தகைய வண்ணமயமான 'ரோட் ஷோ'க்களை முன்னெடுத்துள்ளது.
Latest Tamil News
நளினமும் ஆக்ரோஷமும்: கதகளி - மோகினியாட்டம்
நவீனங்கள் நிறைந்த பெங்களூரு மாநகரின் மையப்பகுதியில், செண்டை மேளம் மற்றும் மத்தள முழக்கங்களுக்கு இடையே, கனமான ஆடைகள் மற்றும் கலைநயம் மிக்க கிரீடங்களுடன் கலைஞர்கள் ஆடிய கதகளி மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. இது 'கடவுளின் சொந்த தேசம்' என அழைக்கப்படும் கேரளாவின் ஆன்மீக மற்றும் கலைத் தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
Latest Tamil News
கதகளி ஆக்ரோஷமான மற்றும் வீர உணர்ச்சிகளைப் பிரதிபலித்த வேளையில், அதற்கு நேர்மாறாக மென்மையான அசைவுகள் மற்றும் பெண்மைக்கே உரித்தான நளினத்துடன் அரங்கேறிய மோகினியாட்டம் பார்வையாளர்களை வசீகரித்தது.
Latest Tamil News
பரவசப்படுத்திய 'தெய்யம்' வழிபாடு
நிகழ்வின் சிகரமாக, வட மலபாரின் ஆன்மீக அடையாளமான 'தெய்யம்' அரங்கேற்றப்பட்டது. கதகளி மற்றும் மோகினியாட்டத்தை விடவும் தெய்யம் முற்றிலும் மாறுபட்டது; இது வெறும் நடனம் மட்டுமல்ல, ஒரு புனிதமான வழிபாட்டு முறையாகும். 'தெய்வம்' என்ற சொல்லின் மருவே 'தெய்யம்' ஆகும்.
Latest Tamil News
இந்தக் கலைஞர் ஆடும்போது அவர் மனிதராகக் கருதப்படுவதில்லை; அந்தத் தெய்வமே அவரில் இறங்கி அருள்வாக்கு சொல்வதாக நம்பப்படுகிறது. இதற்கெனப் பயன்படுத்தப்படும் அடர் சிவப்பு நிற ஆடைகள், பிரம்மாண்டமான தலைக்கவசங்கள் மற்றும் உடலில் வரையப்படும் ஓவியங்கள் காண்போரைக் கட்டிப்போட்டன. கண்கள் சிவக்க, ஆக்ரோஷமான அசைவுகளுடன் தெய்யம் கலைஞர் ஆடியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் ஒருவித ஆன்மீகப் பரவச நிலைக்குச் சென்றனர்.
Latest Tamil News
குழந்தைகளைக் கவர்ந்த மயிலாட்டம்
கேரளாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலை வடிவமான மயிலாட்டமும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடித்தது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான கலை என்றாலும், கேரள கலாச்சார விழாக்களில் இதற்குத் தனி மனிப்பு உண்டு.

நடனக் கலைஞர் மயில் போன்ற செயற்கைக் கூட்டிற்குள் புகுந்துகொண்டு, மயில் தோகை விரித்தாடுவது போன்றும், நீர் அருந்துவது போன்றும் நளினமான அசைவுகளை வெளிப்படுத்தினார். கால்களில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஓசை, ஆட்டத்திற்குத் தனி தாளத்தைக் கொடுத்தது. தெய்யம் மற்றும் கதகளி போன்ற கனமான கலைகளுக்கு இடையே, மயிலாட்டத்தின் துள்ளல் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

கேரளாவின் பாரம்பரிய கலைகளை ஒரே மேடையில் கண்ட பெங்களூரு மக்கள், இந்த கலைத் திருவிழாவைக் கொண்டாடித் தீர்த்தனர்.

— எல். முருகராஜ்

Advertisement