கவர்னர் உரையாற்றும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதே தீர்வு: முதல்வர் ஸ்டாலின்

28


சென்னை: '' சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர உரையுடன் துவங்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதே இப்போதைய தீர்வு,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகா சட்டசபையிலும், கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசின் உரையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதனை வாசிக்காமல் வெளியேறினார். இதற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதலில் தமிழகம், பின்னர் கேரளா, இப்போது கர்நாடகா. இந்த முறை தெளிவாகவும், வேண்டும் என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.


மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க மறுக்கும் கவர்னர்கள், கட்சி முகவர்கள் போல் நடந்து கொண்டு முறையாக தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை குறை மதிப்புக்கு உட்படுத்துகிறார்கள். நான் முன்பு கூறியது போல் சட்டசபைக் கூட்டத்தொடரை கவர்னர் உரையுடன் துவங்கும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதே இப்போதைய தீர்வு.


இந்தியா முழுவதும் உள்ள ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த பார்லிமென்ட கூட்டத்தொடரில் இந்த நடைமுறையை ஒழிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement