'தொண்டர்களை தினமலர் படிக்க வைத்தேன்'

எனக்கும், 'தினமலர்' நாளிதழுக்குமான தொடர்பு, கல்லுாரி பருவத்திலேயே தொடங்கி விட்டது. நான், மதுரை தியாகராஜர் கல்லுாரியில் திருவள்ளுவர் விடுதியில் தங்கி படித்தபோது, சக மாணவர்களுக்காக, என் சொந்த செலவில் தினமலர் நாளிதழை வாங்கி கொடுக்க ஆரம்பித்தேன். அன்று முதல் இன்று வரை, எனக்கு, தினமலர் நிர்வாகத்துடனான பந்தம் தொடர்கிறது.



ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும், தினமலர் தனது நடுநிலைமையில் இருந்தும் நேர்மையில் இருந்தும் மாறியது கிடையாது. தெளிவான சிந்தனை, நேர்கொண்ட பார்வை மற்றும் தொலை நோக்கும் திறன் கொண்ட தினமலர், இன்று, பத்திரிகை உலகில் மட்டுமல்ல, டிஜிட்டல் உலகிலும் 'நம்பர் 1' ஆக இருக்கிறது.


அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்த சமயத்தில், நெல்லையில் இருந்து தான் தினமலர் நாளிதழ் மதுரைக்கு வரும். விலை 25 காசு என நினைக்கிறேன். அப்போது கருப்பு, வெள்ளை படங்கள்தான். அதை பார்க்கும்போதே அவ்வளவு தெளிவாக அச்சிடப்பட்டு இருக்கும். நாங்கள் அப்போது இரண்டு பத்திரிகைதான் வாங்குவோம். ஒன்று தினமலர், மற்றொன்று அமைப்பு செயலாளராக இருந்த கே.ஏ. கிருஷ்ணசாமி நடத்திய 'தென்னகம்' பத்திரிகை. தினமலரில் அ.தி.மு.க., தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அது இன்றும் தொடர்கிறது.


மதுரை, செல்லுார்-சுயராஜ்யபுரத்தில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மன்றத்தை நான் நடத்தியபோது, அங்கும் தினமும் தினமலர் நாளிதழை வாங்கி கொடுத்து, தொண்டர்கள் படிக்க ஏற்பாடு செய்தேன். இன்று, மதுரை, சென்னை உட்பட 12 பதிப்புகளில் தினமலர் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. அவற்றில், ஈரோடு பதிப்பு எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனாலும், நடுநிலை பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக தினமலர் இன்று வெளிவந்துகொண்டு இருக்கிறது.


நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர், ஆசிரியராக இருந்து மறைந்த இரா.கிருஷ்ணமூர்த்தி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி கொண்டிருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தற்போதைய தலைமை ஆசிரியர் கி.ராமசுப்பு, வெளியீட்டாளர்கள் மதுரை டாக்டர் எல். ராமசுப்பு, கோவை எல்.ஆதிமூலம், புதுச்சேரி கி.வெங்கட்ராமன், இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது பணி பாராட்டத்தக்கது.


தென்கோடியில் தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டு, இன்று இந்தியா முழுவதும் தமிழர் பெருமையை பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது, பவள விழா ஆண்டை கொண்டாடும் தினமலர். ஆலமரமாக வளர்ந்து நிற்கும் தினமலர், நுாற்றாண்டு விழாவை நோக்கி வீறுநடை போட்டு பயணிக்க என் வாழ்த்துகள்.


செல்லுார் கே. ராஜூ

முன்னாள் தமிழக அமைச்சர்

அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் மற்றும் மதுரை நகர் மாவட்ட செயலாளர்

Advertisement