குடும்ப வன்முறை புகார்கள் அதிகரிப்பு; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கோவை: தேசிய மகளிர் ஆணையத்தில் 'லிவிங் ரிலேஷன்ஷிப்' மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தேசிய மகளிர் ஆணையம் சார்பில் 'மகிளா ஜன்சுன்வாய்' எனும் பெண்களுக்கானசிறப்பு குறைகேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் டெலினா கோன்தப் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், குடும்ப வன்முறை, பணியிடங்களில் துன்புறுத்தல் மற்றும் சமூக அநீதிகள் தொடர்பாக ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு நீண்ட நாட்களாகத் தீர்வின்றி நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது.




இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாநகரம் - 20, கோவை மாவட்டம் - 16, நீலகிரி - 2, அரியலூர் - 1, திண்டுக்கல் - 1, சென்னை - 1 என மொத்தம் 41 புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், 4 புகார்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மேல் விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளன.


பெறப்பட்ட புகார்களில் பெரும்பாலானவை, ஏற்கனவே திருமணமானதை மறைத்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 'லிவிங் ரிலேஷன்ஷிப்' முறையில் இணைந்து ஏமாற்றியது தொடர்பானவை ஆகும். இது தவிரக் குடும்ப வன்முறை மற்றும் விவாகரத்து தொடர்பான புகார்களும் அதிக அளவில் பதிவாகியுள்ளன,' என்றனர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் இணை இயக்குனர், மாவட்ட சமூகநல அலுவலர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement