கஞ்சா விற்ற காவலர் உட்பட மூவர் கைது

ஊட்டி: ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் உள்ளிட்ட, மூவர் கைது செய்யப்பட்டனர்.


நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த குரூஸ்,26, என்ற இளைஞர் கடந்த, 21ம் தேதி கஞ்சா விற்பனை செய்த போது போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஊட்டி நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமதிடம் வாங்கியதாக தெரிவித்தார். தொடர்ந்து, நசீர் அகமதிடம் விசாரணை நடந்தது. அதில், அவர் கேரள மாநிலம், அட்டப்பாடி கோட்ட தொரையை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, ஊட்டி நகர மத்திய காவல் நிலைய போலீசார் அட்டப்பாடி கோட்டத்தொரைக்கு சென்று சோதனை செய்ததில், 17 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா வியாபாரியை கைது செய்து ஊட்டிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, போக்குவரத்து காவலர் நசீர் அகமது,30, கைது செய்யப்பட்டார்.



இதனிடையே, கஞ்சா விற்பனை தொடர்பான தகவலை, மாவட்ட எஸ்.பி.,க்கு முறையாக தெரிவிக்காத, ஊட்டி நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் அருண் கூடலுார் பகுதிக்கும், ஊட்டி மத்திய காவல் நிலைய தனி பிரிவு காவலர் ஜெயக்குமார் தேவாலா பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., நிஷா உத்தரவிட்டார். போலீசார் கூறுகையில்,'தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் தொடர்பில் உள்ள மற்றவர்களையும் பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement