பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

12


சென்னை: சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:


* கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி இருக்க கூடிய நிலையில், மேலும் புதிதாக 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.


* 8,911 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக, 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,200 கிலோ மீட்டர் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.


* 33 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விவசாய தொழிலாளர்கள் , கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மாதாந்திர ஓய்வூதியங்கள் பெற்று வருகின்றனர். தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

* சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.



* தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.


* அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க ஏதுவாக, ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Advertisement