ஜி.எஸ்.டி., சாலையை கடக்க சிரமப்படும் பாதசாரிகள் கூடுதல் இரும்பு நடைமேம்பாலங்கள் கட்ட எதிர்பார்ப்பு

மறைமலை நகர்: செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையில் கூடுதலாக இரும்பு நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

விரிவாக்கம் இச்சாலையில், இரும்புலியூர் முதல் - வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரமும், வண்டலுார் முதல் - கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரமும், கூடுவாஞ்சேரி முதல் - மகேந்திரா சிட்டி வரை 13 கி.மீ., என, மொத்தம் 209.32 கோடி ரூபாய் மதிப்பில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் பின், வண்டலுார் இரணியம்மன் கோவிலில் இருந்து செட்டிபுண்ணியம் வரை, மொத்தம் 14 இடங்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு வசதியாக, நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என, அறிக்கை தயாரித்து, நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், தைலாவரம் உள்ளிட்ட 7 இடங்களில், இரும்பு நடைமேம்பாலங்கள் அமைக்க 20.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விடுபட்ட திருத்தேரி, பேரமனுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் இரும்பு நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. செங்கல்பட்டு புறநகர் பகுதியில் வண்டலுார், தைலாவரம், காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.

குறிப்பாக காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகம், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரிய அலுவலகம் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்த பகுதிகளைச் சுற்றியுள்ள கிராம மக்கள், அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து செல்கின்றனர்.

அசுர வேகம் அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக, தினமும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமானோர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்து தான் சென்று வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், 250க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.

எனவே, தற்போது மந்த நிலையில் நடைபெற்று வரும் நடைமேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும், புதிதாக மற்ற பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

@quote@ ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது முதல் விபத்து நடைபெறாத நாட்கள் இல்லை. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் 100 அடி அகலம் உள்ள இந்த சாலையைக் கடக்க சிரமப்படுகின்றனர். எனவே, முக்கிய சாலை சந்திப்புகளில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.சதிஷ்குமார், சிங்கபெருமாள் கோவில்quote

@block_B@

விரைவில் பணி முடியும்

நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட்டு வரும் இரும்பு நடைமேம்பாலங்களில் மின்துாக்கி அமைக்கப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்துார், பொத்தேரி பகுதிகளில் மின்துாக்கி பொருத்தி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் பகுதி நடைமேம்பாலங்களில் மின்துாக்கி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மற்ற இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க, உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement