ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

2


டெஹ்ரான்: அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஈரானின் புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.


மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், 6,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.


மேலும் 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதியாக போராடி வரும் ஈரான் மக்களை, அந்நாட்டு அரசு துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கை வாயிலாக கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஈரான் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் முக்கிய படையான புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.


இந்த முடிவு வெளியுறவுத்துறை அமைச்சர்களால் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. புரட்சிகர காவல் படையின் மூத்த தளபதிகள் உட்பட 15 ஈரான் அதிகாரிகள் மீது ஈரான் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

புரட்சிகர காவல் படை

1979 ம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மதகுருமார்களின் தலைமையையும் அது நிறுவிய அரசியல் அமைப்பையும் பாதுகாப்பதற்காக புரட்சிகர காவல்படை உருவாக்கப்பட்டது. இது ஈரான் ராணுவத்துடன் இணைந்து செயல்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த படையாகும்.


1980களின் ஈரான்- ஈராக் போரின் போது முக்கியத்துவம் பெற்றது. போருக்குப் பிறகு அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தபோதிலும், அந்த அமைப்பை தனியார் நிறுவனமாக விரிவுபடுத்த ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement