வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி சார்பில், கட்டப்படும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள், வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. அதில், புது பஸ் ஸ்டாண்டில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட புறநகர்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் வந்து செல்கின்றன.

இந்நிலையில், புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு, ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சி.டி.சி., மேட்டில், 3.25 ஏக்கரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்த வசதிகள், கடைகள், தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலுாட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை கலெக்டர் பவன்குமார் ஆய்வுக்கு பின், தனியார் பஸ் உரிமையாளர்களின் கருத்து கேட்டு, பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தற்போது, சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அதில், தென்னை விவசாயம் குறித்தும், மற்றொரு சுவரில் ஆற்றில் யானைகள் நீர் அருந்துவது போன்ற ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

இதனால், பஸ் ஸ்டாண்ட் சுவற்றில், அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டுவதும், விளம்பரம் செய்வதும் தவிர்க்கப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement