எந்த வகையில் நியாயம்?

'இது நல்ல வேடிக்கையாக இருக்கிறதே...' என, நகைச்சுவையாக கூறுகின்றனர், பீஹார் மக்கள்.

இங்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் வழிநடத்துகிறார்.

கட்சியின் தலைமை பொறுப்புக்கு, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் ஆசைப்பட்டார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காத லாலு, தேஜஸ்வி யாதவுக்கு அந்த பொறுப்பை கொடுத்தார். தொடர்ந்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதால், கடந்தாண்டு தேஜ் பிரதாப்பை கட்சியை விட்டே நீக்கினார், லாலு.

இந்நிலையில், சமீபத்தில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, தன் வீட்டில் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்கும்படி, தந்தை, தாய், தம்பி ஆகியோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார், தேஜ் பிரதாப். அவரது அழைப்பை ஏற்று, தாய் ரப்ரி தேவி மட்டும் விருந்துக்கு சென்றார். மறுநாள், லாலு பிரசாத் யாதவ் சென்றார். தேஜஸ்வி யாதவ் செல்லவில்லை.

இது குறித்து தன் நண்பர்களிடம் பேசிய தேஜ் பிரதாப், 'எங்கள் குடும்பத்துக்குள் கலகத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர். அவர்கள் சொல்வதை கேட்டுத் தான் தேஜஸ்வி என்னை புறக்கணிக்கிறார்...' என, கூறியுள்ளார்.

'இவர்களுக்குள் சண்டை போட்டு விட்டு, அடுத்தவர்களை குறை சொல்வது எந்த வகையில் நியாயம்...' என்கின்றனர், பீஹார் மக்கள்.

Advertisement