அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்

32

சென்னை: 'செல்வம் பெருகும் என கூறியதால், சபரிமலை அய்யப்பன் கோவில் நகைகளை வைத்து எங்கள் வீட்டில் பூஜை செய்தோம்' என, போலீசாரிடம் நடிகர் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவாரபாலகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தின் எடை, 4 கிலோ அளவுக்கு குறைந்தது. இதுகுறித்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.


இது தொடர்பாக, அய்யப்பன் கோவில் முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் தலைமை அர்ச்சகர் போல செயல்பட்டு வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. இந்த விசாரணையின் போது, செப்பனிடும் பணிக்காக தங்கக்கவசம் எடுத்து வரப்பட்ட போது, சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் அது தொடர்பான படமும் சிக்கின.


இதன்படி, சென்னையில் ஜெயராம் வீட்டில், சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஜெயராம் அளித்துள்ள வாக்குமூலம்:



நான், 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். இதனால், கோவிலின் முக்கிய பிரமுகராக செயல்பட்டு வந்த உன்னி கிருஷ்ணன் போத்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.


துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோவில் கருவறை கதவுகளில் இருந்த தங்கக் கவசங்களை சீரமைத்து மெருகேற்ற, சென்னைக்கு எடுத்து வந்துள்ளதாக தெரிவித்தார்.



'அந்த நகைகளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்' என்றும் கூறினார். அவரின் பேச்சை நம்பி, எங்கள் வீட்டில் பூஜை செய்தோம். அது திருட்டு நகைகள் என எனக்கு தெரியாது.


கோவிலுக்கு சென்று வந்த பழக்கத்தால், அவரை நம்பிவிட்டேன். இப்பூஜைக்காக அவருக்கு பணம் எதுவும் தரவில்லை. அய்யப்பன் கோவில் கருவறைக்கு சென்று வழிபட, அவர் உதவி செய்தார். நகைகள் திருடப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement