தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்

32

சென்னை: ''தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.



சென்னை, கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தில், 307.24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் 1,800 குடியிருப்பு கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் அன்பரசன், சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:



தற்காலிக ஊழியர்கள் பணி, ஆண்டுக்கு 11 மாதங்கள். மீண்டும் பணியை தொடரும் போது, இடையில் ஒருநாள் விடுமுறை வழங்கிவிட்டு பணிக்காலம் புதுப்பிக்கப்பட்டு பணியை தொடர்வர்.


இதுபோன்று பணியில் இருப்போரை, எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் பணி நிரந்தரம் செய்யாது.


வேறு மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்திருக்கின்றனரா என, அண்ணாமலையிடம் கேட்டு சொல்லவும். பணி நிரந்தரம் செய்தால், நீதிமன்றம் தலையிடும்.


இதை தெரிந்து கொண்டே, ஒரு சிலர் துாண்டிவிட்டு போராட்டம் செய்கின்றனர் . ஏற்கனவே இதுபோல் துாண்டிவிட்ட நபர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம். போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும்.


தேர்தல் நடக்கும் சூழலில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில், இதுபோன்று துாண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும்.



இந்த நோக்கத்தில் தான், போராட்டம் நடத்துவது, 'பேஷன்' ஆகிவிட்டது என, நேற்று முன்தினம் சொல்லி இருந்தேன். போராட்டங்களை கொச்சைப்படுத்துவது நோக்கமல்ல. நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம்.

இதற்கு முன் ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரை எதிர்த்து போராட்டம் நடத்தி, அவரிடம் விவாதமும் செய்துள்ளேன். அதனால், தொழிற்சங்கம் குறித்து எனக்கு நன்றாக தெரியும்.



தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, இந்தியா முழுதும் உள்ள 36 மாநிலங்களில், தமிழகத்தில் தான் மிகக்குறைந்த அளவில் குற்றச்செயல்கள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement