நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்

சென்னை: 'கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், 7,500 படுகொலைகள் நடந்துள்ளன' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.


அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே, ராஜேந்திரன் என்ற விவசாயி, மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு, பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



தமிழகத்தில் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எரிக்க முடியும் என்ற அளவுக்கு, தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு, இந்த கொடிய நிகழ்வே சான்று.


தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, சட்டம் -- ஒழுங்கு, அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பொது இடங்களில், பொதுமக்கள் முன்னிலையில் நடக்கும் படுகொலைகள், தாக்குதல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


கடந்த நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 7,500 படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால், கொலைகளையும், குற்றச் செயல்களையும் தடுக்க, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


சட்டம் - ஒழுங்கை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக, தி.மு.க., ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement