செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ செடி கருகுவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. பூக்கள் விலை அதிகரித்த போதும், விவசாயிகளுக்கு லாபம் இல்லை என தெரிவித்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,000 ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, காவேரிப்பட்டணம், திம்மாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பப்படுகின்றன.



கடந்த சில வாரங்களாக அதிக பனிபொழிவு காணப்படுகிறது. இதனால் பூக்கள் செடியிலேயே கருகி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:


மார்கழி மாதம் முடிந்தும் கூட அதிகளவில் பனிப்பொழிவு உள்ளது. இதனால் விளைச்சலில், 60 சதவீதத்திற்கு மேல் பூக்கள் கருகிவிடுகின்றன. இதற்காக செடிகளுக்கு மருந்துஅடித்தும் விளைச்சல் அதிகரிக்கவில்லை. சாதாரணமாக கிலோ, 300 ரூபாய்க்கு விற்றால் கூடவிவசாயிகளுக்கு லாபம் உள்ள நிலையில், தற்போது விளைச்சல் மிக குறைவான அளவில் இருப்பதால் கிலோ, 1,000 ரூபாய்க்கு மேல் விற்றும் லாபம் கிடைப்பதில்லை. இவ்வாறு கூறினர்.

Advertisement