தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை

17

மதுரை: பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நிதியும் வேண்டும்; வேந்தர் பதவியும் வேண்டும் என்கிற தமிழக அரசின் பிடிவாதத்தால் சித்தா பல்கலைக்கான ஒப்புதல் கிடைக்காமல் இழுபறி நிலவுகிறது.


பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ் பல்கலை அமைக்க மத்திய அரசு விரும்புகிறது. ஆயுஷ் பல்கலையின் கீழ் ஆயுர்வேதா, யுனானி, யோகா நேச்சுரோபதி, சித்தா, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெறமுடியும். வெவ்வேறு மாநிலங்களில் ஆயுர்வேதா பல்கலையின் கீழ் தான் ஆயுஷின் 5 துறைகள் செயல்படுகின்றன.


சித்த மருத்துவத்தின் தாயகம் தமிழகம் என்பதால் இங்கு சித்தா பல்கலை அமைக்க விரும்பியதில் முதல்வர் ஸ்டாலின் எண்ணம் சரிதான். அதை செயல்படுத்திய விதத்தில் தான் மத்திய அரசின் இணக்கமின்மை வெளிப்பட்டுள்ளது.


சித்தா பல்கலை அமைவதற்கான காலதாமதத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தாலும் பல்கலையின் வேந்தராக தமிழக கவர்னருக்கு பதிலாக தமிழக முதல்வர் என மாற்றப்பட்டதே முக்கிய காரணம்.


சித்தா பல்கலைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பதைக் காட்டுவதற்காக திட்ட வரைவு தயாரிக்கும் போதே, முதல்வரை வேந்தராக நியமித்து வரைவு தயாரிக்கப்பட்டது. இது பல்கலை மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.

அந்தரத்தில் நிற்கிறது




மத்திய அரசின் யு.ஜி.சி., பல்கலைகளுக்கு நிதியுதவி வழங்குவதால் அந்தந்த பல்கலையின் வேந்தராக மாநில கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பல்கலை அமைப்பதில் இந்த முறை மாறுபடுகிறது.

பல்கலை நிறுவனரே வேந்தராக செயல்படமுடியும். யு.ஜி.சி., நிதியுதவி வேண்டுமெனில் சித்தா பல்கலைக்கு கவர்னரே வேந்தராக இருக்க முடியும். இந்த இரட்டை நிலைப்பாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வெளியே வரவேண்டும் என்கின்றனர் சித்தா டாக்டர்கள்.


அவர்கள் கூறியதாவது: நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் யார் வேந்தராக இருந்தால் என்ன என்ற மனப்பான்மை முதல்வருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். வேந்தராக முதல்வர் தான் வரவேண்டும் என விருப்பப்பட்டால் யு.ஜி.சி.,யிடம் நிதியுதவி கேட்க வேண்டாம்.


தமிழக அரசே சுயமாக சித்தா பல்கலை அமைக்கலாம். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் இடையே பல்கலைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள இந்திய மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் தற்காலிக அலுவலகம் செயல்படுகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய்




இந்த இடத்திற்கு பதிலாக பழநியில் ஏற்கனவே சித்த மருத்துவக் கல்லுாரிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கல்லுாரியும், பல்கலையும் ஒருசேர அமைக்கலாம். பழநியில் சித்த மருத்துவக் கல்லுாரி அமைக்க ஏற்கனவே நன்கொடையாளர் 200 ஏக்கர் இடத்தை தானமாக வழங்கியுள்ளார்.


பழநி தேவஸ்தானத்திடம் கல்லுாரி அமைக்க தமிழக அரசு அந்த இடத்தை ஒப்படைத்தது. கல்லுாரி துவங்குவதற்கான முதற்கட்ட பணிக்கு மத்திய அரசு ரூ.20 கோடி வழங்கியுள்ளது. கல்லுாரி துவங்காததால் இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நன்கொடையாளர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போகர் சித்தர் வாழ்ந்த மலை பழநி. எனவே பழநியில் சித்த மருத்துவக் கல்லுாரி, பல்கலை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் தமிழக அரசு கொண்டு வர, கொஞ்சம் நிதி ஒதுக்கினால் போதும். சித்தா பல்கலையின் வேந்தராக தமிழக முதல்வர் நீடிக்கலாம் என்றனர்.

Advertisement