நான் செய்த பாக்கியம்; பஞ்சாப்பில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

1

ஜலந்தர்: பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமான நிலையத்திற்கு 'ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம்' என பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் சந்த் ரவிதாஸின் 649வது ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமான நிலையத்திற்கு 'ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம்' என பிரதமர் மோடி பெயர் சூட்டினார். மேலும், லூதியானாவில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நாம் அனைவரும் சந்த் ரவிதாஸிடம் இருந்து பெரும் உத்வேகத்தைப் பெறுகிறோம். நான் சீர் கோவர்தன்பூர் செல்லும் போதெல்லாம், பஞ்சாபிலிருந்து வரும் எனது சகோதர சகோதரிகளைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைக்கிறது. இந்த முறை, சந்த் ரவிதாஸ் ஜியின் உத்வேகம் நிறைந்த பஞ்சாப்பிற்கு நான் வந்திருக்கிறேன். இதை நான் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தப் புனிதமான பஞ்சாப் மண்ணை நான் வணங்குகிறேன்.

சமூக சேவைத் துறையில், கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பணிகளில் தேரா சச்கண்ட் பல்லான் அமைப்பு ஆற்றி வரும் பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி மகராஜின் வழிகாட்டுதலின் பேரில் இந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.

தேரா சச்கண்ட் பல்லான் அமைப்பின் தலைவர் சந்த் நிரஞ்சன் தாஸூக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement