தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி

65

நமது நிருபர்




கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தலித் அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை திமுக தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ். டிரைவரான இவர் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணியாற்றி வருகிறார். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த பஸ் டிரைவர்களை நீண்ட வழித்தடங்களிலும், மற்ற ஜாதியினரை குறுகிய வழித்தடங்களிலும் பணி அமர்த்துவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளது.


விடுப்பு அனுமதி வழங்கவும், குறுகிய வழித்தடங்களில் பணியமர்த்தவும் ஊழியர்களிடமிருந்து பணம் வசூலித்ததாகவும் அவர் மீது புகார்கள் உள்ளன. இந்த சூழலில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த டி. பிரகாஷ்குமார் புதிய கிளை மேலாளராக பணியில் சேர்ந்தார். சசிராஜ் தனது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பிரகாஷ்குமாரை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் மறுத்து விட்டார். மாறாக, ஜாதி ரீதியான பாகுபாடு காட்டியதற்காக சசிராஜ் மீது ஒரு மெமோ வழங்கி இருக்கிறார்.

இடமாற்றம்



ஆத்திரமடைந்த சசிராஜ், தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உயர் அதிகாரிகளை வற்புறுத்தியதன் விளைவாக, பிரகாஷ்குமார் உக்கடம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம் கிளையில் மேலாளராக பிரகாஷ் குமார் பொறுப்பேற்ற 20 நாட்களிலேயே இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

அவர் மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒரு பணிப்பெண்ணைக் கொண்டு மேலாளரின் அலுவலகத் தரையை மாட்டுச் சாணத்தால் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தார் சசி ராஜ். இந்தச் சம்பவம் தலித் அதிகாரி பிரகாஷ்குமார் முன்னிலையில் நடந்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, அன்று முதல் பணிக்கு வரவில்லை.

குற்றச்சாட்டு



இதற்கிடையில், சில ஊழியர்கள் இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் கொண்டு சென்றனர். இதையடுத்து சசிராஜ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். உயர் அதிகாரிகள் விசாரித்த போது, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த சசிராஜ், தனக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
Latest Tamil News


"நான் வழக்கமாக அலுவலகத்தை சுத்தமாகப் பராமரிப்பேன். அன்று, அந்த அறை அசுத்தமாக இருந்ததால், அது சுத்தம் செய்யப்பட்டது, பராமரிப்பின் ஒரு பகுதியாக மாட்டுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டது என சசிராஜ் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளார்.


திமுக தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர், ஜாதி ரீதியான பாகுபாடு காட்டியதுடன், தலித் அதிகாரி பணியாற்றிய இடத்தை மாட்டுச் சாணம் கொண்டு சுத்தம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement