தொழில்நுட்ப ஊழியர் துவக்கிய 'தொழுவம்'

கோவை அருகேயுள்ள பூலுவப்பட்டி, சித்திரைசாவடி அணைகட்டின் பின்புறம் அமைந்துள்ள 'தொழுவம்', செல்லப்பிராணிகள் புகலிடம். இங்கு, ஊர்வன, பறப்பன, நடப்பன என எல்லாவிதமான விலங்குகளும் உள்ளன.

அதன் உரிமையாளர் நரேஷ் அகில் நம்மிடம் பகிர்ந்தவை...

நான் எம்.பி.ஏ., பட்டதாரி; 'ஜோகோ' நிறுவனத்தில் கை நிறைய சம்பளம். ஐடி., துறையிலேயே செட்டில் ஆவதா அல்லது மனதுக்கு பிடித்ததை செய்து நிறைவாக வாழ்வதா என்ற கேள்வி துரத்தி கொண்டே இருந்தது. அதற்கான விடை தான், 'தொழுவம்- செல்லப்பிராணிகள் புகலிடம்' துவக்கினேன்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, நம்மூர் விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. இதனால், வெளிநாடுகளை சேர்ந்த வித்தியாசமான விலங்குகள் வைத்துள்ளோம். இதில், சில பரிசாக வாங்கி தரப்பட்டவை. ஆதரவின்றி தெருவில் விடப்பட்ட விலங்குகளுக்கும், இங்கே அடைக்கலம் தருகிறோம்.

என்னென்ன உள்ளன? எனது வளாகம், 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஊர்வன, பறப்பன, நடப்பனவற்றில் சிறிய, பெரிய வகை விலங்குகளை தனித்தனியாக வைத்துள்ளோம். பாம்பு, இக்வானா, கினிபிக்ஸ், எலி, முள்ளெலி, முயல், ஆமை, சிலந்தி, தஞ்சாவூர் குட்டை மாடு, ஆப்பிரிக்காவை சேர்ந்த டியூராக், அமெரிக்காவின்யார்க் ஷியர் இன பன்றிகள், குதிரை, ஒட்டகம், வான்கோழி, புறா, பறவைகள் என, பல வித்தியாசமான விலங்குகள் உள்ளன.

தொழுவத்திற்குள் நுழைந்ததும், விலங்குகளை எப்படி தொட வேண்டும், அவற்றிற்கு உணவளிப்பது, வாழ்வியல் முறை குறித்து எடுத்துரைக்கிறோம். நிறைய பள்ளி குழந்தைகள் வருகின்றனர். ஒருவித பயம், படபடப்பு, புதுவிதமான உணர்வுடன் இங்கே வரும் குழந்தைகள், சிறிது நேரத்திலேயே கண்கள் விரிய, ஆச்சர்யத்துடன் விலங்குகளோடு உறவாடுகின்றனர். அவற்றிற்கு உணவளித்து மகிழ்கின்றனர். நிறைய அனுபவங்களை பெறுகின்றனர்.

வீட்டிற்குள் ஒரு செல்லப்பிராணி வருவதற்கு குழந்தைகள் தான் பெரும்பாலும் காரணமாக இருப்பர். ஆசைக்காக அவற்றை வாங்கி, பின் பராமரிக்க முடியாமல் பலர் தெருவில் விடுகின்றனர். செல்லப்பிராணி வாங்கும் முன் இதுபோன்ற விலங்குகள் பார்க் அழைத்து சென்று, அவற்றின் வாழ்வியல் முறை பற்றி எடுத்துரைக்க வேண்டும். செல்லப்பிராணி வளர்த்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், வளர்க்க முடிவெடுத்தால், அவற்றின் பராமரிப்பிற்கு முழு பொறுப்பும், நாமேஏற்க வேண்டும்.

இதுபற்றிய விழிப்புணர்வை, குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறேன். சுற்றுச்சூழல் கல்வி புத்தகம் மட்டும் படிப்பதல்ல. விலங்குகளை தொடாமல், அவற்றுடன் நேரம் செலவிடாமல், சூழலியல் இயக்கத்தை புரிந்து கொள்ளவே முடியாது, என்றார்.

Advertisement